சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்காக பிரத்யேக வடிவமைப்பு அதிகாரப்பூர்வ உறுதிப்பாடு இன்னும் இல்லை!
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு பொறுப்பேற்றதில் இருந்து, முந்தைய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மகளிருக்கான இலவச பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வந்த ‘விடியல்’ என்ற பெயர் நீக்கப்பட்டது உட்பட பல மாற்றங்கள் பெரும் விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
புதிய பேருந்துகள் கொள்முதல் தீவிரமாக்கம்
இந்நிலையில், மாநிலத்தின் பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய அரசுப் பேருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணிகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்காக (MTC) பிரத்யேகமாக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய பேருந்துகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சியில் உள்ள குளோபல் டிவிஎஸ் (Global TVS) யூனிட்டில் பாடி கட்டப்பட்டு வரும் இந்தப் புதிய பேருந்துகளின் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாகப் பரவி வருகின்றன.

த.வெ.க கொடி வண்ணத்தில் வடிவமைப்பு
இணையத்தில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படங்களில் உள்ள பேருந்துகள், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) அதிகாரப்பூர்வ கொடி வண்ணங்களான மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு (Yellow & Maroon Red) ஆகிய வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படங்களில் ‘மாநகர போக்குவரத்து கழகம் சென்னை’ என்ற வாசகம் தெளிவாக இடம் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மையோ அல்லது இந்த வண்ண வடிவமைப்பு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்தோ அரசு அல்லது போக்குவரத்துத் துறை தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் உறுதிப்பாடும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.93,000 கோடியில் பாமகவின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை: அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்!
