கொரட்டூரில் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு குடும்பத்தினரை கத்தியால் வெட்டிவிடுவதாக மிரட்டி வந்த நபரை அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து மீட்டனர்.

கொரட்டூர் கோபாலகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர் குணசேகரன். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் காமேஷ் கண்ணன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. குடும்பத்தினருடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தனது சகோதரியை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, தாயை ஒரு அறையில் உள்ளே அழைத்து சென்று தாழிட்டு கத்தியால் தாக்க முயன்றுள்ளார். மேலும் தன்னையும் தாக்கிக்கொள்வது போல் அச்சுறுத்தி வந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து சத்தம் எழுப்பியுள்ளனர்.
குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிரிஷ்ணமூர்த்தி, காமேஷ் கண்ணனுடன் பேசுவார்த்தத்தை நடத்தியுள்ளார். எனினும் அதனை ஏற்க மறுத்த அவர், குடும்பத்தினரை அச்சுறுத்தி வந்துள்ளார். அதன்பின்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் டோர் ஓபன் இயந்திரம் மூலம் கதவினை திறந்து, காமேஷ் கண்ணன் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து அவரது சகோதரி மற்றும் பெற்றோர்களை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.இதனையடுத்து காமேஷ் கண்ணனை கொரட்டூர் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காமேஷ் கண்ணன் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகியுள்ளர். இதனை தொடர்ந்து அவருக்கு ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. சில மாதங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், மனைவி கடந்த 6 மாதத்திற்கு முன்னர் பிரிந்து சென்றுள்ளார். மேலும் சரியான வேலை இல்லாததால் மன உளைச்சலில் இருந்துவந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது தந்தை குணசேகரன் காமேஷ் கண்ணனை கடிந்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர். பெற்றோரை அச்சுறுத்தியது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி காமேஷ் கண்ணனை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.