கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், சகாப்தம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் மதுரவீரன் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் சிறிய இடைவெளிக்குப் பிறகு படை தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதனை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாலசுப்பிரமணியம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படம் நகைச்சுவை கலந்த அதிரடி ஆக்சன் படமாக உருவாகிறது. அந்த வகையில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய பகுதிகளை சுற்றி இருக்கும் கிராமங்களையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும் பின்னணியாக கொண்டே படம் உருவாகிறது. மேலும் இந்த படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் சண்முக பாண்டியன் ரௌடியாக நடித்து வருகிறாராம். அடுத்தது இந்த படத்தில் தார்னிகா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறாராம். தார்னிகா என்பவர் வேறு யாருமில்லை. நாட்டாமை திரைப்படத்தில் டீச்சராக நடித்திருந்த ராணியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.