விஜயை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகை வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தற்போது பிரபல தமிழ் நடிகையான திரிஷாவின் வீட்டிற்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது விஜய், திரிஷா வீடுகளுக்கு மட்டுமல்லாமல், முதல்வர் மு.க. ஸ்டாலின் , எஸ்.வி. சேகர் ஆகியோரின் வீடுகளுக்கும், பாஜக தலைமை அலுவலகம், கவர்னர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் மோப்பநாய் உதவியுடன் இது தொடர்பாக சோதனை செய்தபோது இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று தெரியவந்துள்ளது.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. இதற்கிடையில் திரிஷா, சூர்யாவின் கருப்பு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.