ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ், கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு பொல்லாதவன், மதராசபட்டினம், ஆயிரத்தில் ஒருவன், அசுரன், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது பிரபலமான இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பதிலும் ஆர்வம் உடையவர். அந்த வகையில் டார்லிங், பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இடி முழக்கம், கள்வன், 13, உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தான் நடிகராக நடிக்கும் 25 வது படத்தை தானே தயாரித்து நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே 2013 ஆம் ஆண்டில் வெளியான மதயானை கூட்டம் திரைப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் தான் நடிக்கும் 25 வது படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக இந்த படத்தை மூன்று பாகங்களாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.