‘ரெட்ரோ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள புதிய படத்திற்கு ‘டோரதி’ எனத் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குவதோடு தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ (Stone Bench) நிறுவனம் மூலம் அவர் தயாரித்துள்ளார். இவரோடு ஆஸ்கர் விருது வென்ற குனீத் மோங்கா மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
நட்சத்திர பட்டாளமும் இளையராஜாவின் இசையும்
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவரது 1540-வது படமாகும். கார்த்திக் சுப்புராஜும் இளையராஜாவும் முதன்முறையாக இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் மூலம் இளையராஜாவின் இசை ரசிகர்களை மீண்டும் ஈர்க்கத் தயாராகி வருகிறது.

படத்தின் பின்னணியும் தாமதத்திற்கான காரணமும்
‘டோரதி’ குறித்துப் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “இது என்னுடைய மிகவும் பெர்சனலான ஸ்க்ரிப்ட். இதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன்; கொரோனா பெருந்தொற்று சமயத்தில்தான் இதன் திரைக்கதையை முழுமையாக எழுதி முடித்தேன். கதையின் தன்மைக்கேற்ப, இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்குப் புது முக நடிகர்கள்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

‘மகான்’ படப்பிடிப்பு சமயத்திலேயெ இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டேன். ஆனால், அடுத்தடுத்து ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் ‘ரெட்ரோ’ போன்ற படங்கள் வந்ததால் உடனடியாகத் தொடங்க முடியவில்லை. மேலும், இந்தக் கதைக்குச் சரியான தயாரிப்பாளரும் அமையாமல் இருந்தது. அனைத்துச் சூழல்களும் கனிந்தவுடன் மதுரை மண்ணைச் சார்ந்த இக்கதையை மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி முடித்துள்ளோம்” என்றார்.
இளையராஜாவுடன் இணைந்த அனுபவம்
இளையராஜாவுடன் பணியாற்றியது குறித்துப் பேசிய அவர், “ஒவ்வொரு படம் எடுத்து முடித்த பிறகும் இளையராஜா சாரிடம் செல்லலாமா என்று தோன்றும்; ஆனால், அவரிடம் செல்வதற்குத் தகுதியான கதை நம்மிடம் இருக்க வேண்டும் என்று நினைத்து பின்வாங்கிவிடுவேன். ஆனால், ‘டோரதி’ படத்தைப் பார்த்தவுடன் இவர்தான் சரியாக இருப்பார் என்று தோன்றியது. அவரிடம் படத்தைக் காட்டி, பிடித்திருந்தால் இசையமைக்குமாறு கூறினேன். படத்தைப் பார்த்துவிட்டு அவரே இசையமைக்க உள்ளே வந்தார்.
இப்படத்திற்காக மொத்தம் 25 நாட்கள் அவர் எங்களுடன் வேலை செய்தார். அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்த வயதிலும் கலை மீது அவர் வைத்துள்ள ஆர்வமும், அவர் காட்டும் எனர்ஜியும் வேறு யாரிடமும் பார்த்ததில்லை. அவருடன் இணைந்து வேலை செய்தது எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உலகளாவிய பிரிமியரும் ரிலீஸ் தேதியும்
மதுரை மண் சார்ந்த எதார்த்தமான கதையம்சம் கொண்ட இப்படம், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) உலக அரங்கேற்றம் (Premier) செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி இப்படம் நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
