திருநங்கைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் மோகன் ஜி-க்கு, ‘டோரதி’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமணம், குழந்தைப்பேறு குறித்து திருநங்கையிடம் பொதுவெளியில் கேள்வி எழுப்பி அவமதிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


திருநங்கையை மையமாகக் கொண்ட ‘டோரதி’ திரைப்படம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘டோரதி’. திருநங்கைகளின் வாழ்க்கை, காதல் மற்றும் அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பாகுபாடுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் வெளியானதைத் தொடர்ந்து, அதன் கதைக்களம் மற்றும் சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகின. இந்நிலையில், திரைப்படம் தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்த கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தின.
மோகன் ஜி பேச்சுக்கு கார்த்திக் சுப்புராஜ் எதிர்ப்பு
இந்த விவாதத்தில் நேகா என்ற திருநங்கையிடம், திருமணம் செய்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள் என்றும், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்தும் மோகன் ஜி கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான காணொளியைக் கண்ட கார்த்திக் சுப்புராஜ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு எதிர்ப்புத் தெரிவித்தார்.
அதில், ஒரு திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்றும், ஆனால் படத்தை விமர்சிப்பதற்கும் ஒருவரின் பாலின அடையாளத்தை முன்வைத்து அவரை அவமதிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“மனிதாபிமானம் என்பது முக்கியம்”
திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே மனித வாழ்க்கையின் நோக்கமா என்று கேள்வி எழுப்பிய கார்த்திக் சுப்புராஜ், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழத் தகுதியற்றவர்களா என்றும் வினவினார்.
மேலும், திருநங்கைகளைச் சமமான மனிதர்களாகப் பார்க்க வேண்டும் என்றும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உறவுகள் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
திரைப்படத்தைப் பற்றி எத்தகைய விமர்சனங்களையும் முன்வைக்கலாம்; ஆனால் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
பாகுபாடான பேச்சுக்கு எதிராக நடவடிக்கை தேவை
பாலின அடையாளத்தின் அடிப்படையில் ஒருவரை இழிவுபடுத்துவது உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட கார்த்திக் சுப்புராஜ், இதுபோன்ற கருத்துகள் பொதுவெளியில் இயல்பானதாகக் கருதப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளைப் போலவே, பாலின அடையாளத்தின் அடிப்படையில் ஒருவரை அவமதிக்கும் பேச்சுகளுக்கும் உரிய விதிமுறைகள் தேவை என அவர் வலியுறுத்தினார்.
கார்த்திக் சுப்புராஜின் இந்தக் கண்டனத்தைத் தொடர்ந்து, திருநங்கைகளின் உரிமைகள், சமூக மரியாதை மற்றும் பொதுவெளியில் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியின் ‘டிரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4-ல் ரிலீஸ்!
