வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சூரி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான விடுதலை திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். ஆர் எஸ் இன்ஃபோடர்மன்ட் தயாரித்த இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசை அமைத்திருந்தார்.

தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு சிறுமலை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஞ்சு வாரியர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் திரைப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு வலிமையான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது விடுதலை 2 படத்திலும் இவரின் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.