Homeசெய்திகள்சினிமாசந்தானம் இஸ் பேக்.... டிடி ரிட்டன்ஸ் விமர்சனம்!

சந்தானம் இஸ் பேக்…. டிடி ரிட்டன்ஸ் விமர்சனம்!

-

நடிகர் சந்தானம் பல படங்களில் காமெடியனாக ரசிகர்களை ரசிக்க வைத்திருப்பார். அதேசமயம் அவர் ஹீரோவாக நடித்த சில படங்களிலும் காமெடிக்கு கேரண்டி உண்டு.

அந்த வகையில் ஹீரோவாகவும் காமெடியனாகவும் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் தில்லுக்கு துட்டு. தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகமாக டிடி ரிட்டன்ஸ் உருவாகியுள்ளது.

இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். சந்தானத்தின் காதலி சுரபி ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவரை அந்த சிக்கலில் இருந்து மீட்பதற்காக சந்தானம் குறிப்பிட்ட அளவு பணத்தை தனது டீமுடன் இணைந்து திருடுகிறார். அந்த பணத்தை பேய் பங்களாவில் ஒளித்து வைக்கிறார். அதன் பிறகு அதனை எடுப்பதற்காக காதலி சுரபியுடன் பங்களாவிற்குள் செல்கிறார். அங்கு பேய்கள் எல்லாம் இணைந்து ஒரு கேம் ஷோவை நடத்துகின்றன. அந்த கேமில் வெற்றி பெற்று சந்தானம் பணத்தை மீட்டாரா இல்லையா என்பதை டிடி ரிட்டன்ஸ் படத்தின் முழு நீள கதையாகும்.

சந்தானத்தின் முந்தைய படங்கள் போலவே இந்த படத்திலும் காமெடிக்கு பஞ்சம் இல்லை. இவருடன் இணைந்து மொட்ட ராஜேந்திரன், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா சேது, பழைய ஜோக் தங்கதுரை, தீபா உள்ளிட்டோர் நகைச்சுவையில் சந்தானத்திற்கு ஈடாக நடித்துள்ளனர். அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரமாகவே பொருந்தியிருக்கிறார்கள்.நடிகை சுரபியை சுற்றி கதை நகர்ந்தாலும் அவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பயன்படவில்லை. பேயாக நடித்துள்ள பிரதீப் ராம் சிங் ராவத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படம் முழுக்க காமெடி நிறைந்து காணப்படுகிறது. படத்தின் முதல் பாதியில் ஹாரர் சம்பந்தமான காட்சிகள் இடம்பெறவில்லை என்றாலும் சில சுவாரசியமான காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் பேய் பங்களாவிற்குள் நுழைந்த பிறகு நடக்கும் காமெடிகள் படத்திற்கு பலமளிக்கிறது. மேலும் படத்தில் தேவையற்ற பாடல்களோ, சண்டைக் காட்சிகளோ எதுவும் இடம் பெறவில்லை. இசையமைப்பாளர் ஆஃப்ரோவின் பின்னணி இசை வழக்கமான ஹாரர் படங்களில் இருப்பது போன்று  தோன்றினாலும் பல இடங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
ட்ரைலரில் பார்த்த காமெடி காட்சிகள் போல ஏகப்பட்ட காமெடி காட்சிகள் படத்தில் இடம் பெற்று ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல் ரசிக்கவும் வைத்திருக்கிறது. சந்தானம் பேய்களை ட்ரால் செய்யும் காமெடி, தலன்னு சொல்லாத ஏகே ன்னு சொல்லு போன்ற காமெடிகள் திரையரங்கையே சிரிப்பினால் அதிர வைக்கிறது.

ஓவராக காமெடிகளை சேர்த்து எரிச்சல் ஊட்டாமல் தேவைக்கேற்ப காமெடிகளை இணைத்து டைமிங் காமெடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.மொத்தத்தில் ஹாரரை மட்டுமே எதிர்பார்க்காமல் காமெடியையும் பார்த்து ஜாலியாக சிரித்து ரசிக்கலாம்.

MUST READ