தளபதி 69 படம் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது ஒரு அரசியல்வாதியாகவும் உருவெடுத்து அரசியல் தொடர்பான பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இவர் தனது கட்சியின் பெயரை அறிமுகப்படுத்தியதோடு தளபதி 69 படம் தான் கடைசி படம் எனவும் அறிவித்திருந்தார். நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கி இருப்பது பலருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் இன்னும் பலருக்கு நடிகர் விஜயின் சினிமா கேரியரில் இதுதான் கடைசி ஆண்டு என்பது இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. இந்நிலையில் தான் இவர், ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 69 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் 2025 அக்டோபர் மாதத்தில் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி தளபதி 69 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த புத்தாண்டு அல்லது பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி தளபதி 69 படத்திற்கு நாளைய தீர்ப்பு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய், எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தான் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதே தலைப்பில் தன்னுடைய கடைசி படத்திலும் நடிக்கப் போகிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.