Homeசெய்திகள்சினிமாதளபதி விஜயின் சொல்லுக்கிணங்க தொடங்கப்பட்ட பயிலகங்கள்!

தளபதி விஜயின் சொல்லுக்கிணங்க தொடங்கப்பட்ட பயிலகங்கள்!

-

பிரபல நடிகர் விஜய் சமீபகாலமாக அரசியல் பிரவேசத்திற்கு தயாராகி வருகிறார். அந்த வகையில் இவர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ரத்த தானம் வழங்குவது, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்குவது போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். மேலும் கடந்த மாதம் தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். அதோடு மாணவ மாணவியர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கல்வியைத் தாண்டி சிந்தனை திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

இதன் மூலம் தளபதி விஜய் இதுபோன்ற நலத்திட்டங்கள் பலவற்றை செய்து காட்டி அதன்பின் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நேற்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பல பகுதிகளில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டிருந்தார்.

அதன்படி மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பேரணியாக சென்று கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோல ஏற்கனவே அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல் காமராஜர் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிகளிலும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாலை நேர பயிலகங்கள் தொடங்குமாறு அறிவித்திருந்தார். தளபதி விஜயின் சொல்லிக்கிணங்க நேற்று முதற்கட்டமாக சென்னை,பெரம்பூரில் உள்ள கொடுங்கையூரில் ‘தளபதி விஜய் பயிலகம்’ என்ற பெயரில் மாலை நேரப் பள்ளியை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்துள்ளார். மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, “தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க இன்று மொத்தம் 14 இடங்களில் பயிலகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இது இன்னும் படிப்படியாக மற்ற தொகுதிகளிலும் விரிவு படுத்தப்படும். இப்பயிலகங்கள் ஐந்து மணி முதல் ஏழு மணி வரை நடைபெறும். முதல் கட்டமாக 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்படும். மாணவர்களின் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி ஒன்று வைக்கப்படும். மேலும் தளபதி விஜய் பயிலகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து விஜய் இடம் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

MUST READ