திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பது தவிர்த்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். இதன் மூலம் விஜய் அரசியலில் கால் பதிக்க தொடங்கிவிட்டார் என்று அடிக்கடி சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் விஜயின் ரசிகர்கள் பலரும் விஜய் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளார் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஆர்கே கான்வென்ஷன் சென்டரில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி விருது, பாராட்டு சான்றிதழ், ஊக்கு தொகை போன்றவற்றை வழங்கினார்.அது மட்டும் இல்லாமல் மாணவ மாணவர்களுக்கு படிப்பை தாண்டி நற்குணங்களும், சிந்தனை திறனும் இருக்க வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினார். மாணவர்கள் பாட புத்தகங்களை தவிர அம்பேத்கர்,பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய விஜய், ‘காடு இருந்தா எடுத்துக்குவாங்க ரூபாய் இருந்தா புடுங்கி கொள்வார்கள், படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து யாராலயும் எடுத்துக்க முடியாது’ என்று தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் பட வசனங்களின் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, விஜய் பேசிய அசுரன் பட வசனங்கள் குறித்து செய்தியாளர்களிடமிருந்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வெற்றிமாறன் “சினிமாவில் நாம் சொல்லும் ஒரு விஷயம், செல்வாக்கு மிக்கவரை சென்றடையும் போது அதனுடைய நேர்மறையான தாக்கம் என்ன என்பதன் எடுத்துக்காட்டாக தான் நான் இதை பார்க்கிறேன். நாமும் நம் வரலாற்றை தெரிந்து கொள்ள அம்பேத்கர், பெரியார் காமராஜருடன் அண்ணாவையும் படிக்க வேண்டும்”என்று பதிலளித்துள்ளார்.


