ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இதில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது வரை 65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் 100 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஷால், ” நிறைய பேர் என்னிடம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் வேறொரு இயக்குனரை தேர்வு செய்யுமாறு கூறினார்கள். ஆனால் கதையில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. இப்போது அதே நபர்கள் மார்க் ஆண்டனி படத்தை பாராட்டுகிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரனின் கரியர் இந்த படத்தில் இருந்து தான் ஆரம்பமாகிறது. மார்க் ஆண்டனி 100 கோடி வசூலை நெருங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தளபதி விஜய்க்கு எனது நன்றி. அவர்தான் மார்க் ஆண்டனி டீசரை வெளியிட்டார். மார்க் ஆண்டனி கதையை விவரித்ததற்கு எனது நண்பன் கார்த்திக்கு நன்றி. அதிருதா மனமே பாடலை பாடியதற்காக டி ஆர் அவர்களுக்கு நன்றி” என்று பேசியுள்ளார்.