சேலத்தில் தனியார் பருப்பு மில்லில் இரவு காவலாளியை கொலை செய்து விட்டு , 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற பீகாரை சேர்ந்த வட இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாநகர், அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கையா (52). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பருப்பு மில்லில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பருப்பு மில்லில் வழக்கம்போல் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பார்த்தபோது, அவர் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில், பருப்பு மில்லில் நுழைவாயில் அருகே சடலமாக கிடந்துள்ளார்.
இரவு காவலாளி இறந்து கிடப்பதை பார்த்த பருப்பு மில் உரிமையாளர் பாஸ்கர், இது குறித்து போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். சடலத்தை பார்த்த உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து போலீசார், தங்கையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலையாளியை கண்டுபிடிக்க பருப்பு மி்ல்லில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவை ஆய்வு செய்த போது, வட இந்திய இளைஞன் ஒருவன், பருப்பு மில்லில் நுழைந்து பணத்தை திருடி கொண்டிருந்துள்ளார். அதனை தடுக்க முற்பட்ட போது வட இந்திய இளைஞன், காவலாளி தங்கையாவை கொலை செய்துவிட்டு பருப்பு மில்லில் இருந்து பணத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து சிசிடிவி பதிவில் இருந்த வட இந்திய வாலிபனின் புகைப்படத்தை வைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். முக்கிய காவல் நிலையங்களுக்கு புகைப்படத்தை அனுப்பி வைத்தனர். இதையடுத்து வட இந்திய இளைஞனின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது, அவன் ஜோலார்பேட்டையில் இருப்பது தெரியவந்தது. ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் பீகாருக்கு தப்பிக்க முயற்சி மேற்கொண்ட போது, சேலம் போலீசார் கொடுத்த தகவலின் பேரில், ஜோலார்பேட்டை ரயில் நிலைய போலீசாரிடம் தகவல் கொடுத்து வட இந்திய இளைஞனை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் சேலத்தில் இருந்து சென்ற போலீசார், அந்த இளைஞனை கைது செய்து, பருப்பு மில்லில் திருடப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவனை பாதுகாப்புடன் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட வந்த இடத்தில் இரவு காவலாளி தடுத்ததால், வட இந்திய வாலிபர் ஒருவர், காவலாளியை அடித்துக்கொலை செய்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 25 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக வட இந்தியா வாலிபர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணையில் கொலை செய்த வாலிபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது அமர்ஜித் குமார் என்பதும் கடந்த ஐந்து வருடங்களாக அமர்ஜித்குமார் தந்தை உமேஷ் பாண்டி, தாய் ரேகாதேவி ஆகியோர் சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள மூணாம் கரடு பகுதியில் வசித்து கொண்டு, கூலி வேலைக்கு சென்று வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில் வாலிபர் அமர்ஜித்குமாரும் கூலி வேலைக்கு சென்று வருகிறார். கடந்த ஏழாம் தேதி அமர்ஜித் குமார் தனது நண்பருடன் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள பருப்பு மில்லுக்கு வந்து வேலை கேட்டுள்ளனர். அப்போது ஒருவருக்கு மட்டும் ஒருநாள் மட்டும் மூட்டை தூக்கும் வேலை உள்ளது என உரிமையாளர் பாஸ்கர் கூறி அமர்ஜித்குமாருக்கு வேலை வழங்கியுள்ளார்.
ஏழாம் தேதி முழுவதும் மூட்டை தூக்கும் பணியில் இருந்த அமர்ஜித்குமார், பருப்பு மில்லில் பணம் கையாளப்படுவதை பார்த்துள்ளார். இதை எடுத்து எட்டாம் தேதி இரவு சைக்கிளில் வந்த அமர்ஜித் குமார் சைக்கிளை ஓரமாக வைத்துவிட்டு பருப்பு மில்லின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து, பருப்பு மில்லுக்குள் சென்று பணம் வைக்கப்பட்டு இருந்த கல்லாப்பெட்டியில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி உள்ளார். சத்தம் கேட்டு உள்ளே வந்த இரவு காவலாளி தங்கையன், அமர்ஜித்குமாரை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது திடீரென கழுத்தை நெரித்து, அவரை தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து வாலிபர் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சிசிடிவி கேமரா பதிவை வைத்து போலீசார் எட்டு மணி நேரத்தில், வட இந்தியா தப்பிச் செல்ல இருந்த வாலிபரை ஜோலார்பேட்டையில் மடக்கி கைது செய்தனர். லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற பேராசையுடன் வந்த கொள்ளையனுக்கு, ஏமாற்றம் மிஞ்சியதுடன் கொலையாளி என்ற பட்டமும் கிடைத்தது குறிப்பிடதக்கது.