Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யமுடியாத குற்றவாளி; போலீஸாருக்கு டிமிக்கி கொடுக்கும் கில்லாடி யார்?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யமுடியாத குற்றவாளி; போலீஸாருக்கு டிமிக்கி கொடுக்கும் கில்லாடி யார்?

-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில் A2 அக்யூஸ்டாக இடம்பெற்றுள்ள சம்பவம் செந்திலை கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் A1-A3 குற்றவாளிகள் நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்ற குற்றவாளியை ஜூலை 14ம் தேதி போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பான 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நாகேந்திரன், அஸ்வத்தாமன், பொன்னை பாலு, அஞ்சலை என்று அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் A2 என்று சொல்லக்கூடிய இரண்டாவது குற்றவாளியை மட்டும் கைது செய்யவில்லை.

தமிழ்நாடு போலீசாரிடம் சிக்காமல் பல ஆண்டுகளாக அல்வா கொடுத்து வரும் சம்பவம் செந்தில் யார்?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இரண்டாவது குற்றவாளியான சம்போ செந்தில் என்ற செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராக படித்தவர். அதன் பிறகு வடசென்னை தண்டையார்பேட்டையில் அலுமினிய பாத்திர பிசினஸ் மற்றும் சாக்லேட் வியாபாரம் செய்தவர். இவர் வெங்கடேச பண்ணையாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேசப் பண்ணையார் யார்?

2003ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த பாத்திமா பீவியின் உறவினரும், வெளிநாட்டு கரன்சிகளை மாற்றி தருவது, கஸ்டம்ஸில் சிக்கிக் கொள்ளும் பொருட்களை விற்பனை செய்வது, போன்ற வேலைகளைச் செய்து வந்தவரும், அதிமுக கட்சிக்காரருமான ஷமீர் முகமது என்பவருக்கும் இந்த வெங்கடேச பண்ணையாருக்கும் நடந்த ஒரு பண பஞ்சாயத்தில் பிரச்சனை அதிகமாகி ஜெயலலிதா வரை சென்று அவரின் கட்டளையால் அப்போது தமிழ்நாடு காவல்துறையால் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவர் தான் வெங்கடேச பண்ணையார்..

அவரின் உறவுக்காரர் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில். இவர் வெங்கடேச பண்ணையாரை காட்டிக் கொடுத்து என்கவுண்டர் செய்ததில் முக்கிய பங்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது .

1990 களில் தென் சென்னையில் ரவுடி அயோத்தியா குப்பம் வீரமணியைப் போல வடசென்னையில் கோலோச்சியவர் மாலைக் கண் செல்வம். இவர் அப்போது சென்னை ஹார்பரை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு பெரும் ரௌடி.
அவரின் வலது கரமாக இருந்தவர் கல்வெட்டு ரவி. கல்வெட்டு ரவி தற்போது பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். எல்.முருகனுக்கும் அண்ணாமலைக்கும் கூட நெருக்கம் என்று கூறப்படுகிறது.

மாலைக்கண் செல்வத்திற்கு வழக்கறிஞராக சென்ற சம்போ செந்தில், அதன் பிறகு மாலைக்கண் செல்வத்திற்கும் கல்வெட்டு ரவிக்கும் பல சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து துணையாய் இருந்தவர் தான் சம்போ செந்தில்.

கொஞ்சநாளில் மாலைக்கண் செல்வம் திருந்தி வாழ ஆரம்பித்தவுடன் மொத்தமாய் வடசென்னையை குத்தகைக்கு எடுத்தவர் கல்வெட்டு ரவி. அவரின் வலதுக்கரமாக செயல்பட்டு அவரோடு சேர்ந்து பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு உள்ளவர் தான் செந்தில். அதோடு வழக்கறிஞரான செந்தில், பற்பல ரௌடிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டு வந்தவர். ஒருகட்டத்தில் அதாவது 2016-2020 காலகட்டத்தில் தனக்கென்று தனி நெட்வொர்க்கை ஏற்படுத்தி அவரே ரவுடியாக ஃபார்ம் ஆகி பிரபல தாதாவாகி இருக்கிறார்.

செந்திலைப் பொறுத்தவரை எந்தச் சம்பவத்துக்கும் நேரில் வர மாட்டார். ஆனால் கொலை, ஆள் கடத்தல் சம்பவங்களுக்கான ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதில் கில்லாடி. அவர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் மிஸ்சே ஆகாமல் சம்பவம் நிகழ்த்தப்படுமாம். அதன் காரணமாக சம்பவம் செந்தில் என்று அழைக்கப்பட்டு வந்தவர், பேச்சுவழக்கில் சம்போ செந்தில் என்று ரவுடிகள் மத்தியில் அழைக்கப்படுகிறாராம்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காக்கா தோப்பு பாலாஜி மற்றும் ரவுடி சி.டி.மணி ஆகியோர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசியதில் சம்போ செந்தில் தான் மூளையாக செயல்பட்டார். 2016-2020ல் பல கொலைகளுக்கு நேரிடையாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து பெரிய தாதாவாக மாறி இருக்கிறார் செந்தில்.

சரி ஆம்ஸ்ட்ராங் கிற்கும் சம்போ செந்திலுக்கும் என்ன பிரச்சனை?

கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் தொழில் இந்த Scrap பிசினஸ் தொழில். அதில் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கும் சம்போ செந்திலுக்கும் தொழில் போட்டி இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்போதுதான் ஆம்ஸ்ட்ராங் மீது முன் விரோத கொலைவெறியில் இருந்த நாகேந்திரன், அவருடைய மகனும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான அஸ்வத்தாமன், அதிமுக மலர்க்கொடி, அதிமுக ஹரிதரன், தமாகா ஹரிஹரன் பாஜக அஞ்சலை, ஆற்காடு சுரேஷ், அவருடைய தம்பி புன்னை பாலு, ஆருத்ரா பிரச்சினை என்று அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்து சம்போ செந்தில் தலைமையில் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

போலீசை ஏமாற்றி தப்பிப்பதில் இந்த சம்போ செந்தில் பலே கில்லாடி.. இதுவரை இவரை கைது செய்ததில்லை.. எந்த வழக்கிலும் சிறைக்கு சென்றதில்லை.. இவரது புகைப்படம் கூட ஒன்றிரண்டை தவிர வேறு எதுவும் இல்லை.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலாவது சம்போ செந்திலை சென்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது குற்றவாளியை கைது செய்யாமல் போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

சம்போ செந்தில் கைது செய்யப்படுவாரா? காவல்துறையால் முடியுமா? வழக்கம் போல் தேடிக்கொண்டே இருப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

MUST READ