கோவையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி என்கிற சத்திய பாண்டி வயது (வயது 32). ஓட்டுநரான இவர் இரவு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம் பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அந்த கும்பல் திடீரென்று அரிவாளால் சத்தியபாண்டியை வெட்டினர். இதனால் அச்சம் அடைந்த சத்திய பாண்டி உயிர் பிழைக்க அங்கிருந்து ஓடத்தொடங்கினார். இருப்பினும் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தி சென்றிருக்கின்றனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க சத்தியபாண்டி சாலையோரம் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று வீட்டிற்குள் புகுந்து வெட்டியிருக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் சத்திய பாண்டி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சத்தியபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2020-ம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜூ என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பத்தில் சத்தியபாண்டிக்கும் தொடர்பு இருந்நதாக கூறப்படுகிறது.
இந்த கொலை தொடர்பாக சத்தியபாண்டி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். எனவே முன்விரோதம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க சிட்டி போலிஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் டி சி சந்தீஸ் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் கொலையாளிகளை பந்தைய சாலை போலிஸார் வலை விரித்து தேடிவருகின்றனர்.