இன்ஸ்டாகிராம் மூலமாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.

கடந்த 22 ஆம் தேதி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி காணாமல் போய்விட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சிறுமியின் செல்போன் டவர் மூலமாக கண்காணித்த போலீசார் அந்த செல்போன் சிக்னல் மகாபலிபுரம் பகுதியை காட்டியதை தொடர்ந்து போலீசார் மகாபலிபுரம் விரைந்து சென்றனர்.
தொடர்ச்சியாக செல்போன் டவரை வைத்து பார்க்கும்போது மகாபலிபுரம் விடுதியில் சிறுமியும், சிறுமியுடன் மற்றொரு இளைஞரும் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த துளசிதரன்(24) என்பதும், கடந்த ஒரு வருடமாக இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் பழகிவந்ததும் தெரியவந்தது.
மேலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக சூளைமேடு போலீசார் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசாரிடம் துளசிதரனை ஒப்படைத்தனர். இதனை அடுத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. உடனடியாக துளசிதரன் மீது சிறுமியை கடத்திய வழக்கு மற்றும் போக்சோ வழக்கு ஆகிய இருபிரிவுகளில் வழக்கு பதிவு செய்யத போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.