காவல்துறையின் உயர் பதவியைக் கவசமாகக் கொண்டு, குற்றவாளிகளை மிரட்டி கோடிக்கணக்கில் மாமூல் வசூலித்த காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் அவரது கூட்டாளி சீனிவாசன் ஆகியோர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, இருவரும் புழல் சிறையில் கம்பிகளை எண்ணத் தொடங்கியுள்ளனர்.


மூன்று கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு
பொதுமக்களை மிரட்டி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஆய்வாளர் புகாரி மற்றும் சீனிவாசன் மீது கீழ்வரும் கடுமையான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது:
BNS 126(2): சட்ட விரோதமாகத் தடுத்து வைத்தல்
BNS 308(2): மிரட்டி பணம் பறித்தல்
BNS 351(2): கொலை மிரட்டல் விடுத்தல்
10 ஆண்டுகாலக் கள்ளக் கூட்டு!
கைது செய்யப்பட்ட சீனிவாசன் ஒரு காலத்தில் ‘பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ (Friends of Police) அமைப்பில் இருந்தவர். சாத்தான்குளம் கஸ்டடி மரணச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முறை முற்றிலுமாகத் தடை செய்யப்பட்ட பின்னரும், புகாரி – சீனிவாசன் கூட்டணி தடையின்றித் தொடர்ந்திருக்கிறது.
வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் புகாரி இருந்தபோது தொடங்கிய இந்த நட்பு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக நீடித்து வந்துள்ளது. புகாரி காட்டும் இடங்களில் எல்லாம் அடியாள் போலச் சென்று மாமூல் வசூலிப்பதையும், விசாரணைக்கு வருபவர்களிடம் பணம் பறிப்பதையுமே சீனிவாசன் தனது முழுநேரத் தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிகார துஷ்பிரயோகமும் மிரட்டல் அரசியலும்
காவல்துறை உயர் அதிகாரிகளின் தனிப்படையில் தனக்கிருந்த செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்திய ஆய்வாளர் புகாரி, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் குறிவைத்து மிரட்டிப் பணம் பறித்துள்ளார். மேலும், உயர் அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லியே பலரிடம் கோடிக்கணக்கில் பணம் கறந்துள்ளாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அதிரடி விசாரணைக்கு உத்தரவு
சொத்துக் குவிப்பு வேட்டை: சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு புகாரி பதுக்கியுள்ள சொத்துக்கள், வாங்கியுள்ள நகைகள் மற்றும் நிலங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வங்கி கணக்குகள் முடக்கம்: புகாரி, அவரது குடும்பத்தினர் மற்றும் சீனிவாசனின் அனைத்து வங்கிக் கணக்குகளும் தீவிரமாகச் சோதிக்கப்பட்டு வருகின்றன.
வலைக்குள் சிக்கிய மர்மநபர்கள்: சீனிவாசனைத் தவிர, இந்த வசூல் வேட்டைக்குப் பின்னால் காவல்துறையைச் சேர்ந்த வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உண்டு என்பது குறித்துத் ரகசிய விசாரணை நடக்கிறது.
தொழில்நுட்பத் தடயங்கள்: ஆய்வாளரின் செல்போன் அழைப்புப் பதிவுகள் மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) அரட்டைகள் கைப்பற்றப்பட்டு, சைபர் கிரைம் உதவியுடன் அழிக்கப்பட்ட தரவுகள் மீட்கப்பட்டு வருகின்றன.
உயர் பதவியில் இருந்துகொண்டே பொதுமக்களை மிரட்டிப் பணம் பறித்த காக்கிச் சீருடைக்காரரின் சாம்ராஜியம் தற்போது தவிடுபொடியாக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் புழல் சிறைக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளது.
