மகாராஷ்டிராவில் தொழில்துறையையே அதிர வைத்துள்ள ஒரு கோரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘ஜி.எஸ்.எம். ஃபாயில்ஸ்’ (GSM Foils) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரைக் கொன்றுவிட்டு, அவருக்குச் செலுத்த வேண்டிய ரூ. 32 கோடி கடனை முழுமையாகத் தவிர்க்க திட்டமிட்ட நிறுவனத்தின் தலைவர் (Chairman) மற்றும் இயக்குனர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.


அரங்கேறிய நாடகம்… அம்பலமான உண்மை!
மகாராஷ்டிரா மாநிலம், பால்கார் மாவட்டம் வசாய்-விரார் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் கடந்த ஜூலை 24-ம் தேதியன்று மாலை, ஜி.எஸ்.எம். ஃபாயில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோகன் சிங் பர்மர் தனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏற முயன்றார். அப்போது முகமூடி அணிந்து வந்த மோட்டார் சைக்கிள் கும்பல் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியது. இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மோகன் சிங் பர்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைக் கண்டறிந்த நிறுவனத்தின் இயக்குனரான சாகர் கிரீஷ் பானுசாலி, எந்தவிதச் சந்தேகமும் வராதவாறு பர்மரைத் தானே மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று நாடகமாடினார். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பது அம்பலமானது.
பங்குச்சந்தை வீழ்ச்சியும், இரத்தக் கறை படிந்த ரூ. 32 கோடியும்!
கைது செய்யப்பட்டுள்ள முக்கியச் சூத்திரதாரியான சாகர் பானுசாலி, அமெரிக்க பங்குச்சந்தையில் செய்த முதலீடுகளில் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்துள்ளார். அந்தச் கடனை அடைக்க, மோகன் சிங் பர்மரிடம் தனது நிறுவனப் பங்குகளை விற்று சுமார் ரூ. 32 கோடியைப் பெற்றுள்ளார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தர முடியாது என்பதோடு, பர்மரை முற்றிலுமாக ஒழித்துக்கட்டினால் நிறுவனத்தின் முழு அதிகாரமும் தனக்கே வந்துவிடும் என்று சாகர் கருதியுள்ளார். இதற்காக உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த கூலிப்படையை ஏவி இந்தத் துப்பாக்கிச்சூட்டை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசாரின் மின்னல் வேட்டை
தொழில்நுட்ப தடயங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளைக் கொண்டு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குற்றவாளிகள் சிக்குண்டனர். நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர் உட்பட 7 பேரைக் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். தொழிலதிபர் ஒருவரைக் கொல்ல சொந்தக் கம்பெனித் தலைவரே கூலிப்படை ஏவிய இந்தச் சம்பவம் வர்த்தக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
