தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் பஜார் பகுதியில் பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வரும் 76 வயது முதியவரை பட்டப்பகலில் காரில் கடத்திச் சென்று தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடையநல்லூர் மெயின் பஜாரில் பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வரும் சந்தானகிருஷ்ணன் (76), இவர் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் கடையில் இருந்தபோது 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்து தலையணை குறித்து விசாரித்துள்ளார்.
பின்னர், தனது உறவினர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு காரில் இருப்பதாகவும், அவரால் காரில் இருந்து இறங்கி கடைக்கு வர முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் கேட்கும் தலையணையை காரில் சென்று காண்பிக்குமாறு முதியவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சந்தானகிருஷ்ணன், மர்ம நபருடன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மர்ம நபர் முதியவரை காருக்குள் இழுத்துப் போட்டு, கதவை அடைத்து காரில் கடத்திச் சென்றுவிட்டனர்.
கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே வைத்து முதியவர் அணிந்திருந்த 15 கிராம் தங்கச் செயின் மற்றும் 8 கிராம் தங்க மோதிரங்களை பறித்துக் கொண்டு, அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு 2.5 லட்சம் ரூபாய் இருக்கும் என்ற மதிப்பிடப்பட்டுள்ளது. சாலையில் சென்றவர்கள் இதனைப் பார்த்து காரின் பதிவு எண்ணை குறித்துக் கொண்டு கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சந்தானகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
சம்பவம் நடைபெற்ற மெயின் பஜார் மற்றும் கடத்திச் செல்லப்பட்ட வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நெருக்கடியான மெயின் பஜார் பகுதியில் பட்டப்பகலில் முதியவரை காரில் கடத்திச் சென்று நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
