சந்தேகமடைந்த வங்கி ஊழியர்களால் மேலும் ரூ.3.5 கோடி தப்பியது; சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை.
கோவையில் 75 வயது முதியவரான தொழிலதிபரை ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) செய்வதாக மிரட்டி, ரூ.5.5 கோடி பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பயங்கரவாத மிரட்டல்:
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதான பிரபல தொழிலதிபர் ஒருவரின் செல்போனுக்கு அண்மையில் அழைப்பு ஒன்று வந்தது. அ
தில் பேசிய நபர்கள், தங்களை “மும்பை காவல் துறை அதிகாரிகள்” எனக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாகப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனால் அவரை ‘டிஜிட்டல் கைது’ செய்திருப்பதாகவும் மிரட்டியுள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறவோ, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசவோ கூடாது என்றும், மீறினால் வீட்டின் அருகே மாறுவேடத்தில் நிற்கும் போலீசார் உடனடியாக நேரில் வந்து கைது செய்வார்கள் என்றும் பயமுறுத்தியுள்ளனர்.
ரூ.5.5 கோடி சுருட்டல்:
தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைச் சரிபார்ப்பதற்காக அவர்கள் கூறும் கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், விசாரணை முடிந்ததும் பணம் மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை உண்மை என நம்பி பயந்துபோன தொழிலதிபர், கடந்த 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5.5 கோடி பணத்தை இரு தவணைகளாக அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
வங்கி ஊழியர்களின் விழிப்புணர்வால் தப்பிய ரூ.3.5 கோடி:
அத்துடன் நிற்காத அந்த மோசடி கும்பல், தொழிலதிபரின் கணக்கில் மீதமிருந்த பணத்தையும் உடனடியாக எடுத்து அனுப்புமாறு மீண்டும் மிரட்டியுள்ளது.
இதனால் மேலும் ரூ.3.5 கோடி பணத்தை எடுப்பதற்காக அவர் வங்கிக்குச் சென்றுள்ளார்.
அவர் தொடர்ந்து அதிகளவிலான பணத்தை எடுப்பதையும், ஒருவித பதற்றத்துடன் காணப்படுவதையும் பார்த்த வங்கி ஊழியர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. உடனடியாக இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாருக்கு வங்கி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை:
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீசார், தொழிலதிபரின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் ரூ.5.5 கோடி ஏமாற்றப்பட்டதும், மேலும் ரூ.3.5 கோடியை மோசடி செய்ய அக்கும்பல் திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இது சைபர் குற்ற கும்பலின் மோசடி நாடகம் என்பதைத் தொழிலதிபருக்குப் புரியவைத்த போலீசார், அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, பணப் பரிவர்த்தனை கணக்குகளை வைத்து மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
