சர்வதேச அளவில் தங்கக் கட்டிகள் மற்றும் போதைப்பொருள் கடத்திய வழக்குகளில் தொடர்புடைய ‘புல்லட் மகாலிங்கம்’ என்பவருக்குச் சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் புல்லட் மகாலிங்கம். இவர் சர்வதேச அளவில் தங்கக் கட்டிகள் மற்றும் மெத்தாம் பெட்டமைன் (Methamphetamine) போன்ற விலையுயர்ந்த போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய பல்வேறு வழக்குகளில் முக்கியக் குற்றவாளியாக உள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இவர், தற்போது மகாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள அவரது சொகுசு வீடு, எதிரிலுள்ள அவரது சகோதரர் கணேசன் வீடு மற்றும் தோட்டப் பகுதி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
6 கார்களில் வந்த 20 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் இடத்தின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பல் தலைவனின் வீட்டில் அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ள இந்த அதிரடி சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
