ஆக்ரா இரயில் சூட்கேஸ் பிண வழக்கு: தலையைத் தேடித் தமிழகம் அழைத்து வரப் போலீசார் திட்டம்.
சென்னை கூடுவாஞ்சேரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் சக பெண் தொழிலாளியைப் படுகொலை செய்து, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிரியாணி அண்டாவில் சமைத்துவிட்டு தப்பிய கணவன்-மனைவி தம்பதியை மணிப்பூரில் வைத்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இக்கொடூரச் சம்பவம் குறித்த விரிவான விவரங்கள் வெளிவந்துள்ளன.

ஆக்ரா இரயிலில் சிக்கிய சூட்கேஸ்: விசாரணையை முடுக்கிய காவல்துறை
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயில் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா இரயில் நிலையத்தைச் சென்றடைந்தது. அப்போது இரயிலின் ஒரு பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸை இரயில்வே ஊழியர்கள் சோதனையிட்டனர். அதில் தலை மற்றும் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சிதைந்த சடலம் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசு இரயில்வே காவல்துறை (GRP), தமிழக இரயில்வே காவல்துறையின் உதவியை நாடியது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு ஆணும் பெண்ணும் அந்தச் சிவப்பு நிற சூட்கேஸுடன் இரயிலுக்குள் நுழைவதும், பின்னர் சூட்கேஸை இரயில் பெட்டியில் வைத்துவிட்டு இரயில் புறப்படும் முன் இறங்கிச் செல்வதும் பதிவாகியிருந்தது. அவர்கள் அங்கிருந்து நடந்து சென்னை பார்க் இரயில் நிலையம் சென்று, புறநகர் இரயில் மூலம் கூடுவாஞ்சேரி இரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் தப்பிச் சென்றதை இரயில்வே போலீசார் கண்டறிந்தனர்.
கூடுவாஞ்சேரி வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி: பிரியாணி அண்டாவில் மனிதக்கறி!
கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அத்தம்பதி சூட்கேஸுடன் வெளியேறியது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாகக் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வீடு முழுவதும் ரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது. கொலையாளிகள், ஒரு பெண்ணைக் கொலை செய்து, அவரது எலும்பு மற்றும் சதையைத் தனித்தனியாக வெட்டியெடுத்து, காய்கறிகள் மற்றும் மைதா மாவு போட்டு வடமாநில பாணியில் ‘தம்’ போட்டு பிரியாணி அண்டாவில் சமைத்து வைத்துவிட்டுத் தப்பியோடியது தெரியவந்தது. இந்தச் சம்பவம் காவல்துறையினரையே உரைய வைத்தது.
கொலை செய்யப்பட்டது யார்? பின்னணி என்ன?
வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹைதுல் நிஷா ஆகியோர் அந்த வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.
கொல்லப்பட்ட பெண் ஹைதுல் நிஷா என்பதும், அவர் தாம்பரம் மெப்ஸில் (MEPZ) உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. கணவரைப் பிரிந்த ஹைதுல் நிஷா, தாம்பரத்தில் ஏசி மெக்கானிக்காகப் பணிபுரியும் தனது 19 வயது மகனுடன் வசித்து வந்தார். ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தபோது மாணிக் லஸ்கருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் இருவரும் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வீட்டில் மாணிக்கின் மனைவியுடன் சேர்ந்து ஒன்றாகத் தங்கியுள்ளனர்.
மணிப்பூரில் பதுங்கியிருந்த தம்பதி கைது!
இக்கொடூரச் சம்பவம் குறித்து ஹைதுல் நிஷாவின் மகன் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட இரண்டு தனிப்படை போலீசார் அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் காஷிம்பூர் பகுதியில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த மாணிக் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜியைத் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களை மணிப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் பி வாரண்ட் (Transit Warrant) பெற்று, மேல் விசாரணைக்காகக் கூடுவாஞ்சேரிக்கு அழைத்து வரப் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தலையைத் தேடும் பணி தீவிர தீவிரமடைந்துள்ளது
தகாத உறவு மற்றும் பணப் பிரச்சனை காரணமாக இக்கொலை நடைபெற்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட ஹைதுல் நிஷாவின் தலை மற்றும் சில உடல் பாகங்கள் இன்னும் கண்டெடுக்கப்படாததால், அவற்றை எங்கு வீசிச் சென்றார்கள்? என்பது குறித்தும், கொலையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என்பது குறித்தும் தம்பதியைத் தமிழகம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் லாரியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 2.8 கிலோ கஞ்சா, லாரி பறிமுதல்
