சென்னை வளசரவாக்கம், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களைக் குறிவைத்துத் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த வாலிபரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
பட்டப்பகலில் நடந்த கொள்ளை
சென்னை வளசரவாக்கம், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மகாலட்சுமி. இவர் ரேஷன் கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியபோது, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், அவர பின் தொடர்ந்து வந்து மகாலட்சுமி அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினைப் பறித்துக் கொண்டு தப்பியோடினார். பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்புக்குள்ளேயே புகுந்து நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிளகாய் பொடி தூவி கைவரிசை
இச்சம்பவம் குறித்து வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதற்கிடையே, எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த அதே பகுதி புகழேந்தி தெருவைச் சேர்ந்த சத்யா (25) என்பவரைத் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் நகரின் பல்வேறு இடங்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது அம்பலமானது. கடந்த மாதம் 2-ம் தேதி நெசப்பாக்கம் பகுதியில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்ற சத்யா, ஐஸ்கிரீம் வாங்குவது போல நடித்துக் கடையில் இருந்த பாப்பா என்ற பெண்ணின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி 8.25 பவுன் தாலி செயினைப் பறித்துச் சென்றுள்ளார். மேலும், தியாகராய நகரிலும் உஷா என்பவரிடம் 4 சவரன் நகையைப் பறித்ததையும் ஒப்புக்கொண்டார்.
கடன் தொல்லையே காரணம்
கைதான சத்யா மீது இதற்கு முன் எந்தவிதக் குற்ற வழக்குகளும் இல்லை என்பதும், கடுமையான கடன் தொல்லை காரணமாகவே அவர் குறுக்கு வழியில் இறங்கித் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
