Homeசெய்திகள்க்ரைம்சமூக வலைதள ஆபாச உள்ளடக்கம்: புகார் அளித்த வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் – டிஜிபி அலுவலகத்தில்...

சமூக வலைதள ஆபாச உள்ளடக்கம்: புகார் அளித்த வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் – டிஜிபி அலுவலகத்தில் மனு!

-

- Advertisement -

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காம உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும், ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்டு பணம் பறித்து வந்த பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்த வழக்கறிஞருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.சமூக வலைதள ஆபாச உள்ளடக்கம்: புகார் அளித்த வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் – டிஜிபி அலுவலகத்தில் மனு!

கட்டணம் வசூலித்து ஆபாச வீடியோக்கள்: குற்றச்சாட்டின் பின்னணி
சேலம் மாவட்டம் வலசையூர் பகுதியைச் சேர்ந்த அஜித் சாக்கோ (என்ற அஜித்), சேலம் மாவட்ட நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி சேலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.

we-r-hiring

அதில், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட தொகையைச் சந்தாவாக (subscription) நிர்ணயித்து, இளைஞர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ‘சில்வர் பிளான்’, ‘கோல்ட் பிளான்’ எனத் தனித்தனியாகக் கட்டணம் வசூலித்து, அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண வீடியோக்களைப் பகிரும் சமூகச் சீர்கேட்டில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தார்.

ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்த புகாரை ஆய்வு செய்த சேலம் சைபர் கிரைம் காவல்துறையினர், கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர் (FIR No: 47/2026).

இதில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) 67, 67A மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 294(4), 294(6) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் IT Act 67A என்பது பிணையில் வர முடியாத (non-bailable) கடுமையான பிரிவாகும். இக்குற்றத்திற்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ₹5,00,000 வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வழக்கில் திருச்சி சாதனா, பிரியங்கா ராஜ், தர்ஷா குப்தா, அணி சென்னை, சூர்ய பிரபா, அபினயா சித்ரா மற்றும் யூடியூப் பிரபலங்களான ஐஸ்வர்யா சிவா, சிந்து சேகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தொடர் அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை மிரட்டல்கள்
வழக்குப்பதிவு செய்யப்பட்ட தகவலை வழக்கறிஞர் அஜித் சாக்கோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்து அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கின.

வழக்கறிஞர் போர்வையில் மிரட்டல்: கோயம்புத்தூரிலிருந்து பேசிய நபர் ஒருவர், தான் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ‘கொம்பன் ஜெகன்’ என்பவரின் வழக்கறிஞர் எனக் கூறி, புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் உயிர் ஆபத்து ஏற்படும் என மிரட்டியுள்ளார்.

தற்கொலை மிரட்டல்: பிரியங்கா ராஜின் சகோதரர் எனக் கூறி பேசிய மற்றொரு நபர், புகாரை வாபஸ் பெறாவிட்டால் திருச்சி எஸ்பி அலுவலகம் முன்பாகத் தற்கொலை செய்துகொண்டு, அதற்கு வழக்கறிஞரையே பொறுப்பாக்கிச் சிறைக்கு அனுப்பப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் வழக்கறிஞர்கள் கொந்தளிப்பு
டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மற்றும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் அஜித் சாக்கோ ஆகியோர் கூறியதாவது:

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர்:
“சமூக நலன் கருதி, இளைஞர்களைப் பாதுகாப்பதற்காகவே வழக்கறிஞர் அஜித் சாக்கோ இந்த புகாரை அளித்துள்ளார். ஜாமீனில் வர முடியாத 67A பிரிவின் கீழ் FIR பதிவு செய்யப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்யாமல் காவலத்துறை காலதாமதம் செய்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல் அளித்து வருவதால், டிஜிபி அலுவலகத்தை அணுகியுள்ளோம்.”

பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் அஜித் சாக்கோ:
“எனது வீட்டிலிருந்து சேலம் நீதிமன்றத்திற்கு நாள்தோறும் 20 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது. வழக்கை முடக்குவதற்காகவும், என்னை அஞ்ச வைப்பதற்காகவும் பலதரப்பட்ட கொலை மிரட்டல்கள் வருகின்றன. சமூகச் சீர்கேட்டிற்கு எதிராகப் போராடும் எனக்குப் பாதுகாப்பு வழங்கி, மிரட்டல் விடுத்த நபர்கள் மீது காவலத்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

சமூக வலைதள ஆபாசக் கும்பலுக்கு எதிராகப் புகார் அளித்த வழக்கறிஞருக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் பெயரில் போலி அறக்கட்டளை: மத்தியப் பிரதேசத்தில் சைபர் மோசடி – இந்தூர் காவல்துறை தீவிர விசாரணை!

MUST READ