Homeசெய்திகள்க்ரைம்திமுக பிரமுகர் வீட்டின் மீது 3 நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு - 4 இளைஞர்கள் தப்பி...

திமுக பிரமுகர் வீட்டின் மீது 3 நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு – 4 இளைஞர்கள் தப்பி ஓட்டம்!

-

- Advertisement -

தாம்பரம் அடுத்த படப்பை அருகே உள்ள காவனூர் பகுதியில், திமுக பிரமுகரின் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததால் பொதுமக்கள் அச்சத்தில் அலறி அடித்து ஓடினர்.திமுக பிரமுகர் வீட்டின் மீது 3 நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு - 4 இளைஞர்கள் தப்பி ஓட்டம்!தாம்பரம் அடுத்த படப்பை காவனூர் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், திமுக பிரமுகருமான முருகனின் சகோதரர் ஜெகநாதன். இவர் காவனூர் ஊராட்சி திமுக பொருளாளராகப் பதவி வகித்து வருகிறார். இவருக்கு சுஜித், சுபாஷ் உள்ளிட்ட 4 மகன்கள் உள்ளனர். அதே ஊராட்சியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (20) என்பவரும் அவரது நண்பர் தீபக்கும், ஜெகநாதனின் மகன் சுஜித்துடன் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகநாதனிடம் சென்ற ஸ்ரீநாத், “உன் மகன் சுஜித்தை எனது நண்பர்கள் ஒரு வாரத்தில் கொன்றுவிடுவார்கள், கத்தியோடு தயாராக இருக்கிறோம்” என்று மிரட்டிச் சென்றுள்ளார்.

இறுதி ஊர்வலத்தில் மோதல்
இந்நிலையில், காவனூர் பகுதியில் ரயில் விபத்தில் உயிரிழந்த ஆகாஷ் என்ற இளைஞரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. இந்த இறுதி ஊர்வலத்தின்போது, போதையில் இருந்த தீபக், ஸ்ரீநாத் மற்றும் அவர்களது நண்பர்கள் சுஜித்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்த ஜெகநாதன், தனது மகன் சுஜித்தை உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சவ ஊர்வலம் முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, போதையில் இருந்த ஸ்ரீநாத், தீபக் உள்பட 4 இளைஞர்கள் காத்துப்பாக்கம் சாலையில் உள்ள ஜெகநாதனின் வீட்டிற்கு வந்துள்ளனர். “உங்களையும் உங்கள் மகனையும் கொன்றுவிடுவோம்” என்று ஆபாசமாகத் திட்டி மிரட்டல் விடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

we-r-hiring

வீடு மீது வெடிகுண்டு வீச்சு
சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஜெகநாதனின் வீட்டிற்கு வந்த அதே 4 இளைஞர்கள், தாங்கள் மறைத்து எடுத்துவந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை ஜெகநாதன் வீட்டின் முன்பும் அருகிலும் வீசி வெடிக்கச் செய்தனர். இதில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததால், சாலையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்களும், வீட்டின் உள்ளே இருந்த ஜெகநாதனும் அவரது குடும்பத்தினரும் உயிர் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு சிதறி ஓடித் தப்பினர். இந்த வெறிச் செயலில் ஈடுபட்டதுடன், ஜெகநாதனின் மற்றொரு மகனான சுபாஷையும் அந்த கும்பல் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியது. இத்தாக்குதலில் காயமடைந்த சுபாஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் அதிர்ச்சி மற்றும் போலீஸ் விசாரணை
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், படப்பை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் சுந்தர் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட இந்தப் பகுதியல் தற்போது கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பொதுமக்கள், கிராமப் பகுதிகளில் அதிகரித்து வரும் கஞ்சா போதை கலாச்சாரத்தால்தான் இதுபோன்ற கொடூரச் செயல்களும், நாட்டு வெடிகுண்டு வீச்சு போன்ற குற்றச் சம்பவங்களும் அதிகரித்து இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைச் சீரழித்து வருவதாகக் கவலை தெரிவித்தனர். தப்பியோடிய ஸ்ரீநாத், தீபக் மற்றும் அவர்களுடன் வந்த அடையாளம் தெரியாத இளைஞர்களைத் தீவிரமாகத் தேடி வரும் போலீசார், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை தி.நகரில் கைவரிசை: நகைக்கடை மற்றும் துணிக்கடைகளில் திருடிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பெண்கள் புதுச்சேரியில் கைது!

MUST READ