மயிலாடுதுறையில் குண்டுமணி மாலைகளை தங்கம் எனக்கூறி பொதுமக்களிடம் நூதன முறையில் விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்ட 2 கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை பகுதிகளில் வேறுமாநிலத்தை சேர்ந்த 3 பேர் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு பணம் பெற்றதாக இருவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மயிலாடுதுறை புதிய பேருந்துநிலையத்தில் நின்றுகொண்டிருந்த எடுத்துக்கட்டி சாத்தனுரை சேர்ந்த கண்ணன்(45) என்பவரிடம் எங்களது வீட்டில் பள்ளம் தோண்டும்போது பூமியிலிருந்து தங்கத்தாலான குண்டுமணி மாலைகள் புதையலாக கிடைத்தது. இதை அரசாங்கம் பார்த்தால் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள், நாங்கள் கஷ்ட நிலையில் இருக்கிறோம், எப்படியாவது இதை குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெஞ்சியுள்ளனர்.
இதை எப்படி நாங்கள் நம்புவது என்று கூறிய கணேசனிடம் 3 பேரும் சேர்ந்துகொண்டு இந்த மாலையிலிருந்து இரண்டு தங்கக்குண்டுகளை கழட்டி கொடுத்து இதை பரிசோதித்த பிறகாவது நம்புங்கள் என்று கூறியுள்ளனர், இதைப் பெற்றுச் சென்ற கணேசன் நகை வியாபாரியிடம் கொடுத்து சோதித்து பார்த்தபோது அவைகள் இரண்டும் அசல் தங்கம் என தெரியவந்தது, உடனடியாக அவர் ஊருக்குச் சென்று ரூ.5 லட்சத்தைப் புரட்டிகொண்டு வந்து மயிலாடுதுறையில் அந்த 3 மர்ம நபர்களிடம் அளித்து 3 கிலோ குண்டுமணி மாலையை வாங்கி சென்றார்.
அதேபோன்று மயிலாடுதுறை கொற்கைப் பகுதியை சேர்ந்த பாலகுரு என்பவரிடம் இதேபோன்று பேசி ரூ.1 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு 1 கிலோ அளவிற்கான குண்டுமணி மாலைகளை விற்றுள்ளனர். இதே போன்று ஒரு வாரத்திற்குள் 10க்கும்மேற்பட்ட நபர்களிடம் பல லட்சம் ரூபாயை சுருட்டிகொண்டு கம்பி நீட்டிள்ளனர். வீட்டிற்கு வாங்கிச் சென்று அவற்றை பரிசோதித்தபோது அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. அதன்பிறகு அவர்களைத் தேடியும் எங்கேயும் கிடைக்கவில்லை. இதுகுறித்து எடுத்தக் கட்டி சாத்தனூரை சேர்ந்த கணேசனும், கொற்கையை சேர்ந்த பாலகுருவும் கடந்த மாதம் 31ஆம் தேதி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்துவந்தனர். விசாரணையில் பலர் மர்மநபர்களிடம் ஏமாந்தது தெரிவந்தது, மர்ம நபர்கள் ஏமாற்றி இரண்டு மாதம் ஆகியதால் அவர்கள் மீண்டும் மயிலாடுதுறை பக்கம் தலைக்காட்ட ஆரம்பித்தனர். இதை அறிந்த போலீசார், குண்டுமணி மாலைகளை வாங்குதுபோல் நடித்து பொதுமக்களைப்போல் வேடமணிந்து அந்த மர்ம நபர்களுக்கு வலை விரித்தனர். போலீசார் விரித்தவலையில் இரண்டு பேரும் சிக்கினர். புரோக்கராக வந்த நபர் தப்பியோடிவிட்டார். இருவரையும் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில், அவர்கள் கர்நாடகா மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த தேவூ(28), ராஜிவ் (48) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், விற்பனைக்கு வைத்திருந்த பல குண்டுமணி மாலைகளைக் கைப்பற்றினர்.
விசாரணையில் அவர்கள் இந்த ஏமாற்றுத் தொழிலை கடந்த 13 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வெற்றிகரமாக செய்ததாகவும் வருமானத்தில் வீடுகட்டியுள்ளதாகவும் தெரிவித்ததுடன் முதன்முதலாக மயிலாடுதுறையில்தான் சிக்கிக் கொண்டதாக கூறினர். 5- க்கும் மேற்பட்டோர் இந்த தொழிலை கச்சிதமாக செய்துவந்ததாக கூறினர். தொடர்ந்து குற்றவாளிகள் 2 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 406 மற்றும் 420 ஆகிய சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலியான குண்டுமணி மாலைகளை தங்கம் எனக்கூறி பொதுமக்களை நம்ப வைத்து வேறு மாநிலத்தவர்கள் ஏமாற்றிய இந்த நூதன மோசடி சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.