சிறுமியின் போட்டோவை மாபிங் செய்து உல்லாசத்துக்கு அழைத்த, திருவாரூர் மாவட்ட வாலிபரை சினிமா பட பாணியில் கைது செய்த, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்…! . பெற்றோர்கள் 18 வயதுக்குட்பட்ட தங்கள் பெண் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் கேமில் தெரியாத நபர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு விளையாடக்கூடாது என்று சைபர் கிரைம் எஸ்பி அறிவுறுத்தினார்.
புதுச்சேரியை சேர்ந்த சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் என்ற செயலியை அதிகளவில் பயன்படுத்தி வந்தார். அப்போது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் இல்லாத ஒரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து இவருக்கு பிரண்ட் ரிக்வெஸ்ட் வந்துள்ளது. பின்னர் இவர் அந்த நபருடன் நட்பாக பேசி பழகி வந்து உள்ளார். சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த நபர் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுமி அந்த காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் சிறுமியின் போட்டோவை மாபிங் செய்து அவருக்கு அனுப்பி இதனை சமூக வலைத்தளங்களில் அனுப்பி விடுவேன் என்றும், மேலும் அவரை ஆடையில்லாமல் நிர்வாணமாக வீடியோ கால் செய்யுமாறு மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
பிறகு இது சம்பந்தமாக பெற்றோர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த நபர் திருவாரூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் சினிமா பட பாணியில், பொறிவைத்து அந்த நபரை புதுச்சேரி எல்லைப்பகுதியான முள்ளோடை பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அந்த நபர் சிறுமியின் பேச்சைக்கேட்டு அப்பகுதிக்கு வந்தவுடன் சைபர் கிரைம் போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து குண்டுகட்டாக காவல் நிலையம் தூக்கிச் சென்றனர். பிறகு அவரிடம் விசாரித்தபோது அவர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி திருமாகோட்டை பகுதியை சேர்ந்த முஜீப் அலி (30) என்பதும், இவர் டிப்ளமோ படித்துவிட்டு சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு தற்போது வீட்டில் இருந்து வருவதும் தெரியவந்தது. பிறகு அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றி சோதனை செய்தபோது, அதில் அந்த சிறுமியின் மார்பிங் புகைப்படம் இருந்துள்ளது.
மேலும் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி செல்போனை ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் அவர் கடந்த 2020ம் ஆண்டிலிருந்து பல்வேறு பெண்களை ஆடை இல்லாமல் வீடியோ காலில் வரச்சொல்லி அதனை ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டு மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அவர் 10-க்கும் மேற்பட்ட போலியான இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் 5க்கும் மேற்பட்ட பேஸ்புக் ஐடியை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவருடைய செல்போனில் 15க்கும் மேற்பட்ட பெண்களுடைய புகைப்படங்கள் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவருடைய செல்போனை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து முஜீப் அலி மீது போக்சோ வழக்கு பதிந்து அவரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், சமூக வலைதளங்களில் முகம் தெரியாத புதிய நபர்கள் அனுப்பும் ப்ரண்ட் ரிக்வெஸ்ட்டை ஏற்க வேண்டாம். சமூக வலைதளங்களில் பார்ப்பது அனைத்தும் உண்மை இல்லை. நிர்வாணமாக போட்டோ எடுப்பதும் வீடியோ கால் செய்வதும் பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகையால் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம். சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக வேண்டாம். உங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏதேனும் மிரட்டல் வந்தால் உடனடியாக உங்கள் பெற்றோரிடமோ அல்லது காவல்துறைக்கோ உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தினால் அவர்களை கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து தான் நடக்கிறது. ஆகையால் பெற்றோர்கள் 18 வயதுக்குட்பட்ட தங்கள் பெண் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் கேமில் தெரியாத நபர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு விளையாடக்கூடாது என்றனர்.
மனைவியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை – கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு