தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய வழக்கில் கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். கடந்த 16 ஆம் தேதி இவர் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் இரவு நேரத்தில் பணியில் இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் அந்த பெண் ஊழியர் காயமடைந்தார் . தற்போது அவர் நெல்லையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இன்று கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் வாழவிளை என்ற ஊரைச் சேர்ந்த அணிஸ் ( 28) என்ற நபரை புளியரையில் கைது செய்தது. கைது செய்யப்பட்ட அணிஸ் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் கேரளாவில் இது போன்ற பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு சிறை சென்று வந்தவர் என்பதும் தெரிய வந்தது.


