போலீஸ் அதிகாரியின் மகள் என்று கூறி காதல் வலையில் வாலிபா்களை விழ வைத்து, அவர்களிடமிருந்து நகை, பணம் மற்றும் செல்போன் பறித்து மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா அடுத்த லாவுடிதாண்டாவை சேர்ந்தவர் பிரத்யுஷா (28). இவர் ஐதராபாத்திலுள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்போன்களை லாவகமாக திருடி, அதனை விற்று பணம் சம்பாதித்து வந்ததாகவும், மேலும் தன்னை ஏஎஸ்பியின் மகள் என்றும், ஐதராபாத் நிம்ஸ் அரசு மருத்துவமனையில், ரேடியோலிஜிஸ்ட் நிபுணராக உள்ளதாகவும், ஐ.ஏ.எஸ். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று கலெக்டருக்கு தேர்வாகி உள்ளதாகவும் விரைவில் கலெக்டராகி விடுவேன் என்றும் கூறியும் பலரை ஏமாற்றி வந்துள்ளார்.
குறிப்பாக வசதி படைத்த இளைஞர்களை காதல் வலை வீசி அவர்களிடமிருந்து செல்போன், நகை, பணம் ஆகியவற்றை பறித்து வந்தார். அவர்களை ஏமாற்றியவுடன் தனது செல்போன் எண்ணை மாற்றிவிட்டு மீண்டும் வேறு வாலிபரை ஏமாற்றுவதை தொடர்ந்துள்ளார். இதேபோல் சில வாரங்களுக்கு முன் நர்கட்பள்ளி பகுதியில் வசிக்கும் டாக்டர் ஒருவருக்கு காதல்வலை வீசி அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், நல்கொண்டா போலீசார், நேற்று முன்தினம் பிரத்யுஷாவிடம் விசாரித்தனர். விசாரணையில் பல போலீஸ் நிலையங்களில் பிரத்யுஷா மீது மோசடி, திருட்டு வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரத்யுஷாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிக்கு ஐந்தே மாதங்களில் தண்டனை!


