பஞ்சாபில் நடந்த நெகிழ்ச்சியான தாய்ச் சந்திப்பு; உறவினர்கள் ஆனந்தக் கண்ணீர்!
கோவை அருகே 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது மகனை, பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கொத்தடிமையாக இருந்தபோது தாய் நேரில் சென்று மீட்டெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

23 ஆண்டுத் தேடல்
கோவை மாவட்டம் நீலாம்பூர் ஆச்சாங்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரி. இவருடைய மகன் பிரகாசம், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திடீரெனக் காணாமல் போனார். மகனைப் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் தீவிர சோகத்தில் மூழ்கினர். இருப்பினும், மகனை என்றாவது ஒருநாள் மீட்டே தீருவது என்ற சுந்தரியின் நம்பிக்கையும் தாய்மை ஏக்கமும் குறையவே இல்லை.
பஞ்சாபில் கொத்தடிமையாகச் சிக்கிய உண்மை
இந்நிலையில், பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த பிரகாசம் குறித்து அண்மையில் ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியையொட்டிய பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அஜ்னாலா (Ajnala) பகுதி கிராமம் ஒன்றில் பிரகாசம் நீண்ட காலமாக வீட்டுக் கொத்தடிமையாக அடைக்கப்பட்டுப் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இத்தகவல் கிடைத்ததும் சுந்தரி மற்றும் குடும்பத்தினர் உடனடியாக பஞ்சாப் மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு குறிப்பிட்ட கிராமத்திற்குச் சென்று பார்த்த தாய் சுந்தரி, 23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனை உயிரோடு கண்டு கண்ணீர்மல்கக் கட்டித் தழுவினார்.
மீண்ட வாழ்க்கை
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக குடும்பத்தினரைப் பிரிந்து, கொத்தடிமை நரகத்தில் உழன்றுவந்த பிரகாசம் தற்போது தாயின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார். நீண்ட ஆண்டுகாலத் தவிப்புக்குப் பிறகு தாயும் மகனும் இணைந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சியில் தவெக எம்எல்ஏவைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!
