சுற்றுலாத் தளமான ஒகேனக்கல்லுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில், காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் நேர்ந்த சோகம்
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஜருகு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது 13 வயது மகள் அவிநிஷா, தருமபுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். வார விடுமுறையையொட்டி, அவிநிஷா தனது உறவினர்களுடன் ஒகேனக்கல்லுக்குச் சுற்றுலா வந்துள்ளார். பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த பிறகு, அனைவரும் மெயின் அருவிக்கு அருகே உள்ள காவிரி ஆற்றுப் பகுதியில் உற்சாகமாகக் குளிக்கச் சென்றுள்ளனர்.

நீரின் வேகத்தில் சிக்கிய மாணவி
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரெனப் பெருக்கெடுத்து வந்த நீரின் வேகத்தில் சிக்கிய அவிநிஷா, எதிர்பாராதவிதமாகக் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார். கண் இமைக்கும் நேரத்தில் சிறுமி வெள்ளத்தில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்கக் கூச்சலிட்டுப் போராடினர். உடனடியாக இது குறித்து ஒகேனக்கல் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
5 மணி நேரமாகத் தொடரும் தீவிரத் தேடுதல் பணி
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், காவிரி ஆற்றில் இறங்கித் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும், ஆற்றின் ஓட்டம் அதிகமாக இருப்பதாலும், ஆழமான பகுதிகள் என்பதாலும் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாகத் தேடியும் சிறுமி அவிநிஷாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வார விடுமுறையைக் கொண்டாட மகிழ்ச்சியாக வந்த இடத்தில், கண் எதிரேயே 13 வயதுச் சிறுமி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் உறவினர்கள் காவிரி கரையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டு இருக்கின்றனர். இச்சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மீட்புப் படையினர் தேடுதல் பணியைத் தொடர்ந்து முடுக்கிவிட்டுள்ளனர்.
