Homeசெய்திகள்இந்தியாஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள்  - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள்  – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

-

- Advertisement -

டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய நுகர்வோர் ஆண்டுதோறும் ரூ.25,000 முதல் ரூ.28,000 கோடி வரை இழக்கின்றனர். 88 சதவீத ஆன்லைன் வாங்குபவர்களை பாதிக்கும் இந்த மறைமுகக் கட்டணங்கள், முன்னணி தளங்களில் அதிகம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள்  - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மறைமுகக் கட்டணங்கள் மற்றும் ஏமாற்றும் வணிக உத்திகள் காரணமாக நுகர்வோர் ஆண்டுதோறும் ரூ.25,000 கோடி முதல் ரூ.28,000 கோடி வரை கூடுதல் செலவைச் சந்தித்து வருவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.  துணிகள், மளிகைப் பொருட்கள், பயண முன்பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தற்போது இணைய தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வசதிகளுடன் சில சவால்களும் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

we-r-hiring

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான டேட்டம் இன்டெலிஜென்ஸ் வெளியிட்டுள்ள “இந்தியாவின் ஆன்லைன் சந்தைகளில் டார்க் பேட்டர்ன்ஸ்” என்ற அறிக்கையில், பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் தொகையைப் பெற உளவியல் ரீதியான வடிவமைப்பு முறைகளை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட சேவைக் கட்டணங்கள், இறுதிக் கட்ட பணப்பரிவர்த்தனையின் போது சேர்க்கப்படும் கூடுதல் செலவுகள், தேவையற்ற சேவைகளை கட்டாயப்படுத்துதல், குறுகிய கால சலுகைகள் என்ற பெயரில் விற்பனை யுக்திகள் மற்றும் சந்தா தொடர்பான சிக்கல்கள் போன்றவை இதில் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் சுமார் 304 மில்லியன் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், அவர்களில் 88 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இத்தகைய நடைமுறைகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு நுகர்வோரும் மாதந்தோறும் சராசரியாக ரூ.78 முதல் ரூ.87 வரை கூடுதல் செலவினைச் சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களில் 63 சதவீதம் பேர் இறுதிக் கட்டத்தில் எதிர்பாராத கட்டணங்களைச் செலுத்துவதாக கூறியுள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்த விகிதம் 52 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

மின் வணிகம், விரைவு வணிகம் மற்றும் ஆன்லைன் பயண சேவைகள் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் 12 முக்கிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின் வணிகப் பிரிவில் அமேசான் மீது அதிக நம்பிக்கை இருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ள நிலையில், ஃபிளிப்கார்ட் குறித்து கலவையான கருத்துகள் பதிவாகியுள்ளன. பயண சேவை துறையில் மேக்மைட்ரிப் பாதுகாப்பான தளமாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கிளியர்ட்ரிப் அதிக பாதிப்புக்குள்ளாகும் தளங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், விரைவு வணிகப் பிரிவில் பிக்பாஸ்கெட் அதிக தீவிரத்தன்மை மதிப்பெண் பெற்றுள்ளது.

டார்க் பேட்டர்ன்ஸ் குறித்து 81 சதவீத நுகர்வோர் அறிந்திருப்பதாக தெரிவித்திருந்தாலும், 85 சதவீதம் பேர் ஏதாவது ஒரு கட்டத்தில் இத்தகைய நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட அனுபவம் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில், வெளிப்படையான மற்றும் நேர்மையான சேவைகளை வழங்கும் தளங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தவும் தயாராக இருப்பதாக 74 சதவீத நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இது, விலை குறைவான சலுகைகளை விட நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருப்பதை வெளிப்படுத்துகிறது.

MUST READ