ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியா மீது பழிபோடும் நோக்கில் கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் செய்தியாளருக்கு, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஒற்றை வரியில் கொடுத்த அதிரடிப் பதிலடி தற்போது சர்வதேச அளவில் பெரும் வைரலாகியுள்ளது.
ஐநாவில் அரங்கேறிய அனல் பறக்கும் தருணம்
ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையின் கூட்டத்தொடர் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மாலுமிகளுக்கான பாதுகாப்பு தொடர்பான ‘நண்பர்கள் குழு’ (Group of Friends on Safety and Security of Shipping and Seafarers) குறித்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், லைபீரியா நாட்டின் வெளியுறவு அமைச்சர் சாரா பெசோலோ நியாந்தியும் இணைந்து இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்தி முடித்தனர். இந்த நிகழ்வு நிறைவடையவிருந்த நிலையில், திடீரெனக் குறுக்கிட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், “இந்தியா எப்போது பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும்?” எனத் திமிர்த்தனமாக ஒரு கேள்வியை எழுப்பினார்.
ஜெய்சங்கரின் அதிரடி எதிர்வினை
பாகிஸ்தான் செய்தியாளரின் இந்தத் தரமற்ற மற்றும் உள்நோக்கம் கொண்ட கேள்விக்குச் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். அந்தச் செய்தியாளரின் முகத்தை நோக்கிப் பார்த்த அவர்,
“ஒரு பயங்கரவாத நாடுதான் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது.. கமான்!” (A terrorist country is asking me that question. Come on!) எனக் கூறி அவரது வாயை அடைத்தார்.
ஜெய்சங்கரின் இந்தத் துணிச்சலான மற்றும் நேரடியான பதிலடியைத் தொடர்ந்து, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பரவதனேனி அந்தப் பத்திரிகையாளரைப் பார்த்து, “உங்களுக்கான பதவியை நீங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்டுவிட்டீர்கள்“ எனக் கூறினார். சர்வதேச மேடைகளில் பாகிஸ்தான் தொடர்ச்சியாகப் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரங்களை அமைச்சர் ஜெய்சங்கர் ஒற்றை வாக்கியத்தில் அடித்து நொறுக்கியுள்ள இந்த நிகழ்வு, உலக நாடுகளின் ஊடகங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
