கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிடக் கூடாது என கிரிக்கெட் வீரர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை தொடர்பாக ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கிரிக்கெ ட் வீரர் அஸ்வின், கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்காக மருத்துவர்கள் ஒன்றிணைவது கண்டு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், நீதி கிடைப்பதில் தாமதம் ஆகலாம், ஆனால் கிடைக்காமலே போய்விடக்கூடாது என்று கூறுவார்கள். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவேக் கூடாது என்று அஸ்வின் வலியுறுத்தினார்.