உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், நெஞ்சு வலியால் சாலையில் மயங்கி விழுந்த முதியவருக்கு உடனடியாக இதய நுரையீரல் புத்துயிரூட்டல் (CPR) முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய காவலருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


துரிதமாகச் செயல்பட்ட காவலர்
லக்னோவில் உள்ள ரஹீம்நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் சந்தீப் யாதவ். இவர் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி பணியில் இருந்தபோது, சாலையில் முதியவர் ஒருவர் திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்ததைக் கண்டார்.
இதையடுத்து, ஒரு நொடியும் தாமதிக்காமல் முதியவருக்கு உடனடியாக சி.பி.ஆர். (CPR) முதலுதவி அளித்தார். இதயச் செயலிழப்பு போன்ற அவசரநிலைகளில் வழங்கப்படும் இந்த முதலுதவி, முதியவரின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தது.
ஆம்புலன்ஸ் ஏற்பாடு
முதியவருக்குத் தொடர்ந்து மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், காவலர் சந்தீப் யாதவ் ஆம்புலன்ஸுக்கும் ஏற்பாடு செய்தார். இதையடுத்து, முதியவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. ஆபத்தான சூழலில் துரிதமாகச் செயல்பட்டு மனித உயிரைக் காப்பாற்றிய காவலரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
காவலருக்குப் பாராட்டுச் சான்றிதழ்
காவலர் சந்தீப் யாதவின் துரித நடவடிக்கையையும், மனிதநேயத்தையும் பாராட்டும் வகையில் லக்னோ காவல்துறை ஆணையர் தருண் கபா அவருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார்.
அவசர காலங்களில் உரிய பயிற்சியும், சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கையும் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதற்கு இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
