மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், 12 வயதுச் சிறுமி ஒருவரின் நுரையீரலில் கடந்த 7 ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி வெற்றிகரமாக வெளியேடுத்து சாதனை படைத்துள்ளனர்.
மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த 12 வயதுச் சிறுமிக்கு மருத்துவர்கள் மறுவாழ்வு அளிப்பு!
மும்பையைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஒருவர், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் கோளாறுகளால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். பெற்றோர் இவரைப் பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும், நோய் பாதிப்பிற்கான சரியான காரணம் கண்டறியப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், சிறுமியின் மூச்சுத் திணறல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மும்பையில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதிக்கப்பட்டார்.
எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி
சிறுமியின் மார்புப் பகுதியில் எக்ஸ்-ரே (X-Ray) மற்றும் சிடி ஸ்கேன் (CT Scan) பரிசோதனைகளைச் செய்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் இடது பக்க நுரையீரலின் சுவாசக் குழாயில் பிளாஸ்டிக் பொருள் ஒன்று அடைத்துக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாகச் சிறுமியின் பெற்றோரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அச்சிறுமி 5 வயது சிறுமியாக இருந்தபோது தவறுதலாகப் பேனா மூடி ஒன்றை விழுங்கியது தெரியவந்தது. அதுவே கடந்த 7 ஆண்டுகளாக அவரது நுரையீரலில் சிக்கி சுவாசப் பாதையை அடைத்து வந்துள்ளது.
அறுவை சிகிச்சையின்றி வெற்றி!
சிறுமியின் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ‘ப்ரோன்கோஸ்கோபி’ (Bronchoscopy) எனும் நவீனக் கேமரா மருத்துவக் கருவியைப் பயன்படுத்தி, சிறுமியின் நுரையீரலுக்குள் சிக்கியிருந்த பிளாஸ்டிக் பேனா மூடியை அறுவை சிகிச்சை எதுவுமின்றி வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
மருத்துவர்கள் எச்சரிக்கை
“சிறுமியின் நுரையீரலில் இவ்வளவு நீண்ட காலம் பிளாஸ்டிக் பொருள் இருந்தபோதிலும், அவருக்குப் பெரிய அளவிலான நுரையீரல் பாதிப்புகள் ஏற்படாதது ஒரு மருத்துவ அற்புதமாகும். சிறிய குழந்தைகள் விளையாடும்போது வாய் மற்றும் மூக்கு வழியாகப் பொருட்களைப் போடுவதைத் தவிர்க்கப் பெற்றோர்கள் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.” தற்போது சிறுமி மூச்சுத்திணறல் இன்றி நலமாக உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
