
டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 76 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய அக்ஷர் பட்டேல் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம் அணி அவர்களது ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு கொண்டு வருகிறது. இந்திய அணியை எண்ணி பெருமை கொள்கிறோம். இது வரலாற்று சிறப்பு மிக்கது என தெரிவித்துள்ளார். இதேபோல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உங்களின் சிறப்பான டி20 பயணத்திற்கு எனது வாழ்த்துகள். நீங்கள் உண்மையிலேயே பிரமாண்டமான முறையில் விளையாடினீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
