ராமர் பாலம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் இருக்கும் மணல் போன்ற திட்டு ராமர் பாலம் என்று நம்பப்படுகிறது. இது இயற்கையாக உருவானது அல்ல என்றும் இது மனிதர்களால் கட்டப்பட்டது. இதன் கற்கள் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. அதனை மூடியிருக்கும் மணல் படிமங்கள், 4 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவையாகும்.

இதனால் சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும், அதனை தேசிய பிரதான சின்னமாக அறிவிக்கக்கோரியும் கடந்த 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியசுவாமி மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் கோரிக்கை வழங்கலாம் என்றும், 4 வாரத்தில் உரிய பதில் கிடைக்காதபட்சத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனவும் கடந்த ஜனவரி 18ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் என்னென்ன செயல்முறை மற்றும் நடவடிக்கைகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பான நிலை அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என கடந்த மாதம் 18ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று ஆஜரான சுப்ரமணியன்சுவாமி ஒரு முறையீட்டை வைத்தார்.

அப்போது, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை, எனவே ராமர் பலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, ராமர் பாலம் தொடர்பான மனு விரைந்து பட்டியலிட்டு விசாரிக்கப்படும், இருப்பினும் தற்போது அரசியல் சாசன அமர்வு வழக்குகளை விசாரித்து வருவதால் அந்த விசாரணை நிறைவடைந்த பின் ராமர்பால வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
