ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்ய ஆயுதப் படைகளில் 227 இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக இந்திய அரசிடம் தகவல் இருப்பதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இவர்களில் 139 பேர் ராணுவப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 51 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.
51 இந்தியர்கள் உயிரிழப்பு
கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்வுகளுக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் மிஸ்ரி, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் தொடர்பான தற்போதைய நிலவரத்தை விளக்கினார்.
அப்போது, ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக இந்திய அரசிடம் தகவல் உள்ள 227 இந்தியர்களில், 139 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், துரதிருஷ்டவசமாக 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மீதமுள்ள இந்தியர்களின் நிலை என்ன?
227 பேரில் 139 பேர் விடுவிக்கப்பட்டு, 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 37 பேரின் நிலை குறித்து மேலும் தகவல்கள் தேவைப்படுகிறது. அவர்களைப் பற்றிய விவரங்களைத் திரட்டுவதுடன், அவர்களையும் ரஷ்ய ராணுவப் பணியில் இருந்து விடுவித்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை
இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்ட விவகாரம் குறித்து இந்தியா–ரஷ்யா இடையே பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய தூதரகமும் சம்பந்தப்பட்ட இந்தியர்களின் விவகாரங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார். மீதமுள்ள இந்தியர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உக்ரைன் போரில் சிக்கிய இந்தியர்கள்
ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரஷ்யா சென்ற சில இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக புகார்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள 227 பேர், 139 பேர் விடுவிப்பு மற்றும் 51 பேர் உயிரிழப்பு என்ற எண்ணிக்கை இந்த விவகாரத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்
ரஷ்ய ராணுவத்தில் இன்னும் இருக்கும் இந்தியர்களை விடுவித்து, அவர்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதே தற்போது இந்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதற்காக மாஸ்கோவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான பேச்சுவார்த்தைகளிலும் முக்கியமான அம்சமாக இடம்பெற்றுள்ளது.
