அயோத்தி ராமர் கோயிலுக்குக் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் வழங்கிய ரூ.4 கோடிக்கான காசோலை, வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரூ.4 கோடி காசோலை கொடுத்துவிட்டு கணக்கில் ரூ.3 மட்டுமே! கோயம்புத்தூரைச் சேர்ந்த எஸ்.நாகலட்சுமி என்ற பெண் பக்தர், கடந்த மாதம் 25-ம் தேதி அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அப்போது ரூ.10,000 ரொக்கமாக நன்கொடை அளித்தவர், தொடர்ந்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அலுவலகத்திற்குச் சென்று கோயில் ஊழியர்கள் நலனுக்காகப் பயன்படுத்தக் கோரி ரூ.4 கோடிக்கான காசோலையை (Cheque) நன்கொடையாக வழங்கினார்.
அறக்கட்டளை நிர்வாகம் அந்த காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது, அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் வெறும் ரூ.3 மட்டுமே இருப்பது தெரியவந்து காசோலை பணமாக்கப்படாமல் திரும்பியது.
சட்ட நடவடிக்கை எடுக்க வங்கி தயார் பெரிய தொகைக்கான காசோலை என்பதால், வங்கி நடைமுறைகளின்படி அப்பெண்ணுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கவும் வங்கி நிர்வாகம் தயார் செய்து வருகிறது. அதேவேளையில், அப்பெண்ணின் தொலைபேசி எண் இருப்பதால் அவருடன் பேசித் தீர்வு காணவும் அறக்கட்டளை நிர்வாகிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
நிலுவையில் ரூ.22 கோடி நன்கொடை காசோலைகள் ராமர் கோயிலுக்கு மாதந்தோறும் ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை நன்கொடை கிடைக்கும் சூழலில், இதுபோன்று காசோலைகள் திரும்புவது முதன்முறையல்ல.
2020-ல் நடைபெற்ற ‘நிதி சமர்ப்பண் அபியான்’ இயக்கத்தில் சுமார் ரூ.3,500 கோடி நிதி திரட்டப்பட்டது.
அதில் தொழில்நுட்பக் காரணங்களால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான காசோலைகள் திரும்பின.
பெரும்பாலான தொகைகள் பின்னர் வசூலிக்கப்பட்ட போதிலும், இன்னமும் ரூ.22 கோடி மதிப்பிலான காசோலைத் தொகைகள் வசூலாகாமல் நிலுவையில் உள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அதிக மதிப்புள்ள காசோலைகளைப் பெறுவதிலும் சரிபார்ப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்த அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
விமானப் பயணிகளுக்கு புதிய விதி! இன்று முதல் இந்த நடைமுறை ரத்து – என்ன மாற்றம்?
