Homeசெய்திகள்இந்தியாதெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் - பள்ளி முதல்வர் கொலை வழக்கு: 10-ஆம் வகுப்பு மாணவர்கள்...

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் – பள்ளி முதல்வர் கொலை வழக்கு: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது

-

- Advertisement -

கொண்டமல்லேபள்ளியில் இயங்கி வரும் நாகார்ஜுனா கான் செப்ட் பள்ளியின் முதல்வர் ரூபா ரெட்டி (48) படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பள்ளியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் - பள்ளி முதல்வர் கொலை வழக்கு: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது

தனியாக இருந்தபோது நடந்த துயரம்
கடந்த 11-ஆம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்குத் திரும்பிய ரூபா ரெட்டி, சமையலறையில் தேநீர் தயாரித்துக்கொண்டே தனது சித்தியிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார். கணவர் மற்றும் மகன் இருவரும் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக ஐதராபாத் சென்றிருந்ததால் அவர் வீட்டில் தனியாக இருந்தார்.

we-r-hiring

மறுநாள் காலை கணவர் ராஜேந்தர் ரெட்டி பலமுறை போன் செய்தும் மனைவி எடுக்காததால், வீட்டின் மேல் தளத்தில் வசிக்கும் வாடகைதாரருக்குத் தகவல் தெரிவித்தார். அவர் அருகில் வசதிக்கும் காவல் உதவி ஆய்வாளருடன் (SI) சென்று சமையலறை ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ரூபா ரெட்டி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.

பாபு என்ற வார்த்தை கொடுத்த திருப்புமுனை
கணவர் அளித்த புகாரின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக வெளிமாநிலக் கொள்ளைக் கும்பல் மீது சந்தேகம் எழுந்த நிலையில், ரூபா ரெட்டி கடைசியாகப் பேசிய தொலைபேசி உரையாடலைச் சோதித்தனர். அப்போது அவர் திடீரென “பாபு.. ஹே பாபு..” என்று கத்திவிட்டு இணைப்பைத் துண்டித்தது தெரியவந்தது.

ரூபா ரெட்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களை ‘பாபு’ என்று அழைப்பது வழக்கம் என்பதால், விடுதி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், சம்பவ நாளிலிருந்து இரு மாணவர்கள் பள்ளிக்கு வராததும், திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த அவர்கள் கையில் அதிக பணத்துடன் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. மேலும், கைதான ஒரு மாணவன் விடுதியில் சட்டவிரோதமாகப் பயன்படுத்திய செல்போனை முதல்வர் பறிமுதல் செய்து கண்டித்ததால், அவன் மீது ஆத்திரத்தில் இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

CCTV காட்சிகளும் தொடர் விசாரணையும்
சுமார் 70 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிவப்பு நிற ஆடை அணிந்த மாணவன் ஒருவன் சம்பவத்தன்று வீட்டிற்குப் பின்புறமாகச் சென்று வருவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, டோனியாலா சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த இரு மாணவர்களையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.54 லட்சம் பணம், ஒரு ஐபோன் மற்றும் 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் இருந்த சில ரூ.500 நோட்டுகளில் ரத்தக்கறை இருந்ததால், காவல்துறையினர் தங்களது பாணியில் நடத்திய விசாரணையில் மாணவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி
பள்ளிக் கட்டணப் பணம் முதல்வர் வீட்டில் இருக்கும் என எண்ணி, அதைத் திருடத் திட்டமிட்ட மாணவர்கள், கத்தி மற்றும் கையுறைகளை வாங்கித் தயார் செய்துள்ளனர். சம்பவத்தன்று ஒருவன் வெளியில் காவல் காக்க, மற்றொருவன் முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளான்.

சமையலறையில் திருட முயன்றபோது ரூபா ரெட்டி அதைப் பார்த்ததால், ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் 27 முறை குத்திக் கொலை செய்துள்ளான். பின்னர் படுக்கையறையில் இருந்த ரூ.2.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, கொலைக்குப் பயன்படுத்திய பொருட்களைப் புதர்களிலும், ஆடைகளைச் சாக்கடையிலும் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் - பள்ளி முதல்வர் கொலை வழக்கு: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது

கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டதாக நல்கொண்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரத்சந்திர பவார் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மதிய உணவில் உப்புக்கு பதிலாக சலவைப் பவுடர்: 34 மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு!

MUST READ