மேற்கு வங்கத்தின் 9வது முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி இன்று கொல்கத்தாவில் பதவியேற்றார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மாநிலத்தில் பா.ஜ.க.வின் முதல் ஆட்சியை அவர் அமைத்துள்ளார்.
மேற்கு வங்க அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி 294 தொகுதிகளில் 207 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த திரிணாமூல் காங்கிரஸின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பாஜக சார்பில் முன்னிலை வகித்த சுவேந்து அதிகாரி, நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரு முக்கிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குறிப்பாக பவானிபூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தோற்கடித்தது தேசிய அரசியலிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மேற்கு வங்கத்தின் 9வது முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கொல்கத்தா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்களும் விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு தேசிய அளவில் முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
57 வயதான சுவேந்து அதிகாரி, 2016 முதல் 2020 வரை மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் அமைச்சராக பணியாற்றியவர். பின்னர் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர், தற்போது மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை நிறுவிய முக்கிய தலைவராக அவர் பார்க்கப்படுகிறார்.
பா.ஜ.க ஏஜெண்டாக செயல்படுகிறார் தமிழக ஆளுநர் – வழக்கறிஞர் கபில் சிபல் விமர்சனம்
