
18வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியானது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. 96 கோடி வாக்காளர்களில் 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஒட்டு மொத்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக 293 இடங்களையும், காங்கிரஸ் 232 இடங்களையும் மற்றவை 18 இடங்களையும் பெற்றுள்ளன. பாஜகவை விட காங்கிரஸ் கட்சியானது 61 இடங்கள் பின் தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 18வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியானது தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.


