யுபிஐ மூலம் பணம் செலுத்தும் விவகாரத்தில் நுகர்வோரிடம் தனியாக வரி அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் நடைபெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். யுபிஐ தொடர்பான கட்டணம் நுகர்வோர் மீது சுமத்தப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


புதுச்சேரியில் நடைபெற்ற ‘பாரத் சக்தி பாண்டி லிட் ஃபெஸ்ட்-2026’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம், யுபிஐ கட்டண விவகாரம் குறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்த் ரங்கநாதன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான புரிதல் ஏற்படுத்தப்படுவது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
இது வரி அல்ல
யுபிஐ தொடர்பாக பேசப்படும் Merchant Discount Rate (MDR) என்பது வரியோ அல்லது செஸ்ஸோ அல்ல என்றும், அந்தத் தொகை அரசின் ஒருங்கிணைந்த நிதியில் சேராது என்றும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இது பணப்பரிவர்த்தனை சேவையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இடையிலான கட்டண ஏற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.2,000-க்கு மேற்பட்ட சில பரிவர்த்தனைகளுக்கு MDR
புதிய UPI கட்டமைப்பின்படி, குறிப்பிட்ட வகையிலான வணிகர் பரிவர்த்தனைகளில் ரூ.2,000-க்கு மேல் உள்ள தொகைக்கு 0.4 சதவீத MDR பொருந்தும். இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த MDR நுகர்வோரிடம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரூ.2,000-க்கு குறைவான வணிகர் பரிவர்த்தனைகளுக்கு MDR இல்லை. மேலும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மேற்கொள்ளப்படும் (P2P) UPI பரிவர்த்தனைகள் தொகை எவ்வளவு இருந்தாலும் இலவசமாகவே தொடரும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
96 சதவீத வணிகர் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது
மத்திய அரசின் தகவலின்படி, மொத்த UPI வணிகர் பரிவர்த்தனைகளில் சுமார் 96 சதவீதம் இந்த புதிய MDR கட்டமைப்பால் பாதிக்கப்படாது. MDR மூலம் கிடைக்கும் தொகை வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை செயலி உள்ளிட்ட UPI கட்டமைப்பில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு இடையே பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ சேவையை தொடர்ந்து பராமரிப்பதற்கும், தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த ஏற்பாடு தேவைப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எனவே, யுபிஐ கட்டணம் தொடர்பாக வெளியாகும் தகவல்களை முழுமையாக சரிபார்த்த பிறகே பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே மத்திய அரசின் விளக்கமாக உள்ளது.
