Homeசெய்திகள்இந்தியா“என் மகனைப் போல வளர்த்தேன்; அவன் மட்டும் திரும்பி வந்தால் போதும்!” – காணாமல் போன...

“என் மகனைப் போல வளர்த்தேன்; அவன் மட்டும் திரும்பி வந்தால் போதும்!” – காணாமல் போன கிளியை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பெண்!

-

- Advertisement -

காணாமல் போன செல்லப்பிராணியை மீட்டுக் கொடுப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது செல்லக் கிளியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

we-r-hiring

வெறும் செல்லப்பிராணியாக மட்டுமின்றி, தனது சொந்தக் குழந்தையைப் போல வளர்த்த கிளி காணாமல் போனதால் அந்தப் பெண் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.

கூண்டின் கதவைத் திறந்து பறந்த லட்டு!

குஜராத் மாநிலம் வதோதரா நகரின் சேவாசி பகுதியில் வசிக்கும் ஜெசிகா பரேக் (35) என்பவர், லட்டு என்ற பெயரில் 6 மாத காங்கோ ஆப்பிரிக்கன் கிரே (Congo African Grey) வகை கிளியை வளர்த்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை மாலை வீட்டில் கிளிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தபோது, வீட்டின் அழைப்பு மணி ஒலித்துள்ளது. பார்சல் வாங்குவதற்காக ஜெசிகா சிறிது நேரம் வெளியே சென்றுள்ளார்.

அப்போது கூண்டுக்குள் இருந்த லட்டு, தனக்குத் தெரிந்த கூண்டின் தாழ்ப்பாளைத் திறந்து, வீட்டின் பிரதான கதவு வழியாக வெளியே பறந்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெசிகா, உடனடியாகக் கிளியைத் தேடத் தொடங்கினார்.

ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு – தொடர்ந்து தேடும் குடும்பத்தினர்!

கிளியைக் கண்டுபிடிக்க அக்கம்பக்கத்தினர், வனத்துறையினர் மற்றும் பறவைகள் மீட்புக் குழுவினரின் உதவியை ஜெசிகா நாடியுள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் கிளியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, லட்டுவைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு அல்லது அதன் இருப்பிடம் குறித்த நம்பகமான தகவலை அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

லட்டு இளம் வயதுடைய கிளி என்பதால், அது சுமார் 15 கிலோமீட்டருக்கு மேல் பறந்திருக்க வாய்ப்பில்லை என்று ஜெசிகா நம்புகிறார். வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டுப் பகுதியில் கிளி தென்பட்டதாகத் தகவல் கிடைத்தும், அங்கு தேடியபோது கிடைக்கவில்லை.

வேறு கிளி வேண்டாம்; என் லட்டு மட்டுமே வேண்டும்!

ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்புக்குப் பிறகு ஜெசிகாவுக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. சிலர் லட்டுவைப் போன்ற மற்றொரு கிளியை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால், தனக்கு வேறு எந்தக் கிளியும் வேண்டாம் என்றும், தான் ஆசையாக வளர்த்த லட்டு மட்டுமே திரும்பி வர வேண்டும் என்றும் ஜெசிகா தெரிவித்துள்ளார்.

சிலர் வேறு கிளிகளின் புகைப்படங்களை அனுப்பி பரிசுத் தொகையைப் பெற முயன்றதாகவும் கூறப்படுகிறது. தனது கிளியின் காலில் அடையாள வளையம் இருப்பதால், அதன் மூலம் உண்மையான லட்டுவை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் எந்த வியாபாரமும் செய்யவில்லை; என் குழந்தையைத் தேடுகிறேன்!”

தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட ஜெசிகா, “நான் எந்த வியாபாரமும் செய்யவில்லை. என்னுடைய குழந்தையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வீட்டில் லட்டுவை எப்போதும் கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கவில்லை என்றும், வீட்டிற்குள் சுதந்திரமாகப் பறந்து விளையாட அனுமதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தீபாவளிப் பட்டாசுச் சத்தத்தால் லட்டு பயந்து எங்காவது தனியாக மறைந்திருக்குமோ என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தின் ஓர் அங்கமாகவே வாழ்ந்த லட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையுடன் ஜெசிகாவும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளையாடும்போது விபரீதம்! 3 வயது சிறுமியின் நெஞ்சில் பாய்ந்த கத்தரிக்கோல் – அறுவை சிகிச்சையில் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்!

MUST READ