Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் முதல் புல்லட் ரயில்: மணிக்கு 280 கி.மீ. வேகம், வைஃபை, சொகுசு இருக்கைகள்! என்னென்ன...

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: மணிக்கு 280 கி.மீ. வேகம், வைஃபை, சொகுசு இருக்கைகள்! என்னென்ன சிறப்பம்சங்கள்?

-

- Advertisement -

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம், நாட்டின் அதிவேக ரயில் போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கத் தயாராகி வருகிறது. மும்பை – அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ள இந்த அதிவேக ரயில், நவீன தொழில்நுட்பம், பயணிகளுக்கான சொகுசு வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.

we-r-hiring

பெங்களூருவில் உள்ள பிஇஎம்எல் (BEML) நிறுவனத்தின் தயாரிப்பு மையத்தில் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட புல்லட் ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது ரயிலின் கட்டமைப்பு வலிமையை உறுதி செய்வதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

மணிக்கு 280 கி.மீ. வேகம்!

இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயில், அதிகபட்சமாக மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் சேவையின்போது மணிக்கு 249 கி.மீ. வேகத்தில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 202 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயிலில் 8 பெட்டிகள் இடம்பெறும். இதில் 4 மோட்டார் பெட்டிகளும், 4 டிரெய்லர் பெட்டிகளும் இருக்கும்.

ஒரு ரயிலில் சுமார் 557 பயணிகள் பயணிக்க முடியும். தேவைப்பட்டால் இரண்டு 8 பெட்டிகள் கொண்ட ரயில்களை இணைத்து 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கவும் வசதி உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 1,114 பயணிகள் பயணிக்க முடியும்.

சொகுசு இருக்கைகள் முதல் இலவச வைஃபை வரை!

பயணிகளின் வசதிக்காக ரயிலில் பல்வேறு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன.

  • போதிய கால்வெளியுடன் கூடிய சொகுசு இருக்கைகள்
  • அகலமான ஜன்னல்கள் மற்றும் LED விளக்குகள்
  • மொபைல் போன், லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதி
  • பெரிய பயணப் பைகளுக்கான தனி இடம்
  • இலவச வைஃபை அடிப்படையிலான பொழுதுபோக்கு வசதி
  • நவீன பயோ-டைஜெஸ்டர் கழிப்பறைகள்
  • பயணிகளுக்கான தகவல் திரைகள் மற்றும் ஒலி அறிவிப்புகள்
  • அவசர காலங்களில் ரயில் பணியாளர்களைத் தொடர்புகொள்ளும் வசதி

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்!

மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரயில் மற்றும் நடைமேடை இடையே உயர வேறுபாடு இல்லாத வகையில் அமைக்கப்படுவதால், பயணிகள் எளிதாக ஏறி இறங்க முடியும்.

மேலும், சக்கர நாற்காலிகளுக்கான வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக இருக்கைகள் மற்றும் கழிப்பறைகள், பிரெய்லி எழுத்துகளுடன் கூடிய அறிவிப்புகள் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறுகின்றன.

அதிவேகத்தில் பாதுகாப்பு மற்றும் குறைந்த சத்தம்!

அதிவேகத்தில் ரயில் இயக்கப்படும்போது ஏற்படும் காற்று எதிர்ப்பு, சத்தம் மற்றும் சுரங்கப்பாதைகளில் ஏற்படும் அழுத்த மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ரயிலின் முன்பகுதி மற்றும் உடல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கணினி அடிப்படையிலான Computational Fluid Dynamics (CFD) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரயிலின் காற்றியக்க வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

ரயிலின் உடல் மற்றும் தரைப் பகுதிகளில் ஒலி தடுப்பு அமைப்புகள், சத்தத்தைக் குறைக்கும் பூச்சுகள் மற்றும் சக்கரப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு அமைப்புகள் இடம்பெறுகின்றன.

மின்சார சேமிப்பிலும் நவீன தொழில்நுட்பம்!

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 25 kV, 50 Hz மின்சார அமைப்பில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் வேகத்தைக் குறைக்கும்போது உருவாகும் ஆற்றலை மீண்டும் மின்சார அமைப்புக்குத் திருப்பி அனுப்பும் Regenerative Braking தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது.

மும்பை – அகமதாபாத் பயணம் இனி சுமார் 2 மணி நேரம்!

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடம் சுமார் 508 கி.மீ. நீளம் கொண்டது.

இந்த வழித்தடத்தில் மும்பை, தானே, விரார், போய்சர், வாபி, பிலிமோரா, சூரத், பரூச், வதோதரா, ஆனந்த், அகமதாபாத் மற்றும் சபர்மதி என மொத்தம் 12 நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் மும்பை – அகமதாபாத் இடையிலான பயண நேரம் சுமார் 2 மணி நேரமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம், நாட்டின் ரயில்வே போக்குவரத்தில் புதிய தொழில்நுட்பத்தையும், வேகத்தையும், பயணிகளுக்கான நவீன வசதிகளையும் அறிமுகப்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

ராஜஸ்தான் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

MUST READ