சமூகத்தில் ஆதரவற்றவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5,000-க்கும் மேற்பட்டோர் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் தங்குவதற்காக, மும்பை அருகே கர்ஜத் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ‘நீடா முகேஷ் அம்பானி அனந்த் ஆஷ்ரய்’ (Nita Mukesh Ambani Anant Ashray) என்ற பிரம்மாண்ட பராமரிப்பு மையத்தை உருவாக்க ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான நீடா அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் இயக்குநர் இஷா அம்பானி ஆகியோர் இதில் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப சூழலில் வாழும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்படுகிறது.

சிறப்பு மருத்துவமனை, மறுவாழ்வு மையங்கள், உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy), பேச்சுப் பயிற்சி மற்றும் சிறப்புப் பராமரிப்பு வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
சிறார்களுக்கு கல்வி மற்றும் கைவினைப் பயிற்சிகள், பேக்கரி, உணவகம் போன்ற சுயதொழில் சார்ந்த வேலைவாய்ப்புகளும் இங்கு உருவாக்கப்படும்.
இங்கு வசிப்பவர்கள் மன அமைதி பெற இயற்கை சூழல், பூங்காக்கள் மற்றும் ‘வந்தாரா’ (Vantara) அமைப்பின் ஆதரவுடன் விலங்கு பராமரிப்புப் பண்ணையும் அமைக்கப்படவுள்ளது.
