பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்தடுத்து அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. அமிர்தசரஸ் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான குன்வர் விஜய் பிரதாப் சிங் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.


இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ளனர்.
சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம்!
தனது ராஜினாமா கடிதத்தை பஞ்சாப் சட்டப்பேரவை சபாநாயகர் குல்தார் சிங் சத்வானிடம் குன்வர் விஜய் பிரதாப் சிங் சமர்ப்பித்துள்ளார். இதுதொடர்பான விவரங்களையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
அரசின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய வழக்குகளில் நீதி வழங்கப்படுவது தொடர்பான அதிருப்தி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாட்களில் 3 எம்.எல்.ஏ.க்கள் விலகல்!
குன்வர் விஜய் பிரதாப் சிங்கின் ராஜினாமா ஆம் ஆத்மி கட்சியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக, பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த சமானா தொகுதி எம்.எல்.ஏ. சேத்தன் சிங் ஜோரமஜரா மற்றும் சனௌர் தொகுதி எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் பதன்மாஜ்ரா ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தனர்.
தற்போது குன்வர் விஜய் பிரதாப் சிங்கும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே 5 ஆண்டுகள் கட்சியில் இருந்து இடைநீக்கம்!
முன்னாள் காவல்துறை அதிகாரியான குன்வர் விஜய் பிரதாப் சிங், கடந்த ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
2015-ஆம் ஆண்டு ஃபரித்கோட் திருட்டு மற்றும் கோட்கபுரா துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், அமிர்தசரஸில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் தொடர்பான விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மாநில அரசின் செயல்பாடுகளை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘டபுள் இன்ஜின் ஆட்சி இப்போது டபுள் ஜீரோவாகிவிட்டது!’ – பாஜகவை விமர்சித்த அகிலேஷ் யாதவ்!
