Homeசெய்திகள்இந்தியாசட்டமன்றத் தேர்தலுக்கு முன் யோகி ஆதித்யநாத் அதிரடி.. பெண்களுக்கு ₹1 லட்சம் வழங்கும் 'மகிளா உத்யமி'...

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் யோகி ஆதித்யநாத் அதிரடி.. பெண்களுக்கு ₹1 லட்சம் வழங்கும் ‘மகிளா உத்யமி’ திட்டம்!

-

- Advertisement -

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2027) சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களும் தேர்தல் களப்பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் பெண்களை மையப்படுத்திய திட்டங்களுக்கு அரசுகளும் அரசியல் கட்சிகளும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் யோகி ஆதித்யநாத் அதிரடி.. பெண்களுக்கு ₹1 லட்சம் வழங்கும் 'மகிளா உத்யமி' திட்டம்!

we-r-hiring

அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகப் பெண்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கத்துடன் ‘மகிளா உத்யமி கிரெடிட் யோஜனா’ (Mahila Udyami Credit Yojana) என்ற புதிய திட்டத்தை உத்திர பிரதேச அரசு தொடங்கத் தயாராகி வருகிறது.

பெண்களுக்கு ரூ.1 லட்சம் வட்டி இல்லாக் கடன்
இத்திட்டம் குறித்து அம்மாநில துணை முதல்வரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கேசவ் பிரசாத் மௌரியா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, மாநிலத்தில் உள்ள சுமார் 1 கோடிப் பெண்கள் புதிய சிறு தொழில்களைத் தொடங்கவோ அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்தவோ ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இத்திட்டம் ‘உத்தரப் பிரதேச மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்’ (UPSRLM) கீழ் இயங்கும் சுயஉதவிக் குழுக்களில் அங்கத்தினராக உள்ள பெண்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 கட்டங்களாகக் கடன் வழங்கும் முறை
 ‘மகிளா உத்யமி கிரெடிட் யோஜனா’ திட்டத்தின் கீழ் மொத்த நிதியுதவியான ரூ.1 லட்சம் ஒரே தவணையாக வழங்கப்படாமல், மூன்று கட்டங்களாகப் பிரித்து வழங்கப்படும்:

  1. முதல் கட்டம்: தொடக்கமாக பெண்களுக்கு ரூ.20,000 கடன் வழங்கப்படும்.

  2. இரண்டாம் கட்டம்: முதல் தவணையைக் குறிப்பிட்ட காலத்தில் சரியாகத் திருப்பிச் செலுத்தும் பெண்கள், இரண்டாம் கட்டமாக ரூ.30,000 கடனைப் பெறத் தகுதி பெறுவர்.

  3. மூன்றாம் கட்டம்: இரண்டாம் தவணையையும் வெற்றிகரமாகத் செலுத்திய பிறகு, அவர்களுக்கு இறுதித் தவணையாக ரூ.50,000 கடன் வழங்கப்படும்.

3 கோடி பெண்கள் பயனடைய இலக்கு
 இத்திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக அம்மாநிலத்தைச் சேர்ந்த 3 கோடிப் பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 1 கோடிப் பெண்களுக்கு இக்கடன் நிதியுதவி வழங்கப்பட உள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள 2 கோடிப் பெண்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயசார்பு பொருளாதாரமே முதன்மை நோக்கம்
இத்திட்டம் குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், “பெண்களுக்கு வெறும் கடன் வழங்குவது மட்டுமே இத்திட்டத்தின் நோக்கம் அல்ல. அவர்களின் மாதாந்திர வருமானத்தை அதிகரித்து, அவர்களைப் பொருளாதார ரீதியாகச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும். பெண்களின் வருமானம் அதிகரிப்பது அவர்களின் குடும்பப் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதோடு, கிராமப்புறங்களின் செழிப்புக்கும் மிகப்பெரிய அடித்தளமாக அமையும்” என்று தெரிவித்தனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ள இந்த பிரம்மாண்ட கடன் உதவித் திட்டம் அம்மாநிலப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதிதாக 30 சேர்க்கப்பட்டு மொத்தம் 190 அணு ஆயுதங்கள்: அமெரிக்க ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

MUST READ